பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 186

 வந்தார்கள். சராப்புகள் அல்லது பாங்கர்கள் நடுவுநிலைமையும் தேவையும் கூடிய தங்கள் தொழிலால் இந்துஸ்தானத்திலுள்ள மக்களையும் அவர்கள் உடைமைகளையும் காப்பவர்களாய் இருந்துங்கூட, அவர்களும் கொடுங்கோலன் அல்லது வெற்றி கொண்டவனுடைய கொடுமைகளிலிருந்து தப்பவில்லை. அவனுடைய படையின் முக்கியப் பகுதி பாளையங்கோட்டைக் கோட்டையை முற்றுகையிட்டது. ஆனால் கோட்டைக்குள் இருந்த சிப்பாய்கள் எளிதாக எதிரிகளை எதிர்த்து அவர்களுக்குப் பேரிழப்பை உண்டாக்கினார்கள். ஆனால், உணவுப் பற்றாக்குறையினால் ஆபத்து ஏற்பட்டிருந்தது. இதைத் தவிர்க்க, சிப்பாய்களின் தலைவனாகிய பாசப்ப நாயகன் கட்டபொம்ம நாயக்க பாளையக்காரனின் உதவியை நாடினான். கட்டபொம்மன் தன் மாவட்டத்தில் இருந்த வளமுள்ள நிலங்களின் உரிமை கேட்டு உடன்படிக்கை வேண்டினான். அதை ஏற்றுக் கொண்டவுடன், கட்டபொம்மன் தன்னுடைய படையுடனும் தன்னைச் சார்ந்த எட்டையபுரத்தானுடைய படையுடனும் அப்போரில் பங்குகொண்டான். அவர்கள் வருகையை அறிந்த படைகள், ஆத்திரத்துடன் போரிட்டன. ஆனால் சிறிது நேரப் போருக்குப்பின் எதிரிகள் முற்றுகையிட்டுச் சென்றார்கள். இதற்குப்பின் இரண்டு பாளையக்காரர்களும் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பினார்கள். கட்டபொம்ம நாயக்கன் ஆங்கிலத்துருப்புகள் மதுரையை அடையுமுன் அவர்களுடன் சென்று சேர்ந்து கொண்டான். மக்புசுகான் திருநெல்வேலியிலிருந்து சமேதார்களுக்குப் படையோ பணமோ எதுவும் அனுப்பாதிருந்தான். பரக்கதுல்லா மதுரையிலிருப்பவர்களுக்கு உணவு பற்றாக்குறை அதிகமாக வருவதையும், உணவை வாங்கத்தக்க பணத்திற்கும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதையும், தங்கள் உணவை இறக்குமதி செய்யப்பணம் மிகத் தேவையாயுள்ளது என்றும் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருந்துங்கூட, அதைக் கவனியாது, சிற்றின்பங்களில் பணத்தைச் சிதறவிட்டுக் கொண்டிருந்தான் மக்புசுகான். சீக்கிரத்திலேயே சமேதார்கள் மதுரையைக் காப்டன் காலியட்டிடம் ஒப்படைத்தார்கள். அதற்காக மக்புசுகான் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய நிலுவைச் சம்பளத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.

மதுரையிலிருந்து மகம்மது யூசுபு திரும்பும்போது மக்புசுகானுடன் இருந்த குதிரைப்படைக்கு அழைப்பு அனுப்பியிருந்தான். எனினும், மற்றவர்கள் திருநெல்வேலி நாட்டில் கொள்ளைக்காரர்களாய்ச் சூறையாடிக் கொண்டிருந்தார்கள். எட்டையபுரத்து மாவட்டங்கள் வழியாகச் செல்லும்போது பாளையக்காரன் ஒருவன், தனக்கு