பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11 கால்டுவெல்

பல நூற்றாண்டுகளுக்குப் பின் வாழ்ந்தவர் என்றும் கூறுகின்றனர். (கால ஆராய்ச்சியில் கால்டுவெல் நடுநிலை போற்றத்தக்கது! - ந.ச.)

தாமிரபரணியின் புண்ணிய தீர்த்தங்கள்

இந்தியர் இந்த ஆற்றில் நீராடுவதன் சமய மேம்பாட்டில் இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளனர். நதியின் ஒவ்வொரு பகுதியும் புண்ணியமுடையது. ஆனால், இக்காலத்தில் நதியின் மேற்பக்கத்திலுள்ள நீர்வீழ்ச்சியில் நீராடுதலைச் சிறந்த புண்ணியச் செயல் என்று எண்ணுகிறார்கள்.

இந்த ஆற்றில் இரண்டு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஒன்று, பொதியமலைச்சாரலிலுள்ள ‘வான தீர்த்தம்’ (வாணன் என்ற அசுரனால் இப்பெயர் பெற்றது); மற்றொன்று 90 அடி உயரமுள்ள புகழ்பெற்ற பாபநாசம் (பாவத்தை அழிப்பது). பாபநாசமானது சாதாரணமாகக் கல்யாண தீர்த்தம் - கல்யாணி (பார்வதி நீராடும் புண்ணிய தீர்த்தம்) என்று வழங்கப்படுகிறது. ஆனால், சிலர் கல்யாணி தீர்த்தம் என்பது, அகஸ்தியருக்குப் பார்வதி பரமேசுவரின் திருமணக்காட்சி காட்டப்பட்ட இடமாதலின், ‘திருமண புண்ணிய தீர்த்தம்’ என்றும் கூறுகின்றனர். இந்த நீர்வீழ்ச்சி தாமிரபரணி, மலையிலிருந்து சமவெளியில் பாயுமிடத்திலிருக்கிறது. வானதீர்த்தத்தின் அருகில் பாம்பன் அருவி என்று வழங்கப்படும் மற்றொரு சிறந்த நீர்வீழ்ச்சியும் உண்டு. தூரத்திலிருந்து பார்ப்பதற்குப் பாம்பைப் போன்று நீண்டு வளைந்த தோற்றமுடையதாய் இருப்பதால், பாம்பன் நீர்வீழ்ச்சி, பாம்பன் அருவி என்னும் பெயர் பெற்றது. இந்த நீர்வீழ்ச்சி, மேல் 500 அடி உயர அருவி, கீழ் 200 அடி உயர அருவி என்னும் இரு நீர்வீழ்ச்சிகளாலாகியது. புகழ்பெற்ற இந்நீர்வீழ்ச்சி முக்கிய ஆற்றிலில்லாமல் ஐந்து தலைப் பொதிகையில் உற்பத்தியாகிவரும் கிளையாற்றில் அமைந்துள்ளது.

குற்றால அருவிகள்

தாமிரபரணி கடலுடன் கலக்குமிடத்தில் அதில் வந்து கலக்கும் வடகிளையாறாகிய ‘சித்திராநதி’, கொச்சைத் தமிழில் சித்தாறு என்று வழங்கப்படும், மிக அழகிய சிறிய ஆறாகும். குற்றாலத்தில் இவ்வாற்றிலுள்ள நீர்வீழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது. வெவ்வேறு காரணங்களால் ஐரோப்பியர்களும் இந்தியர்களும் இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதில் மிக விருப்புடையவர்களாயுள்ளார்கள். உலகத்திலேயே மிக அருமையானதும் தூய்மையானதுமான நீராடுதுறை குற்றாலமே என்று துணிந்து கூறுதல் சற்றும் மிகையாகாது (பேராசிரியர் கால்டுவெல்லும் திக்கெட்டும் புகழும் ‘திருநெல்வேலிக்காரர்’ ஆகிவிட்டார் பாருங்கள்!