பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 196

அவன் பாளையக்காரருடன் சேர்ந்துகொண்டால், திருநெல்வேலி நாட்டில் நவாபின் ஆட்சியை ஒருக்காலும் நிலைநிறுத்த முடியாதென்றும் தெரிவித்தான். இந்தத் தடுமாற்றத்தில் சிக்குண்டிருந்தபோது, மகமது யூசுபுக்கு அவன் வேண்டுகோளின்படி சென்னையிலிருந்து அனுப்பப்பட்ட 500 இரண்டு பதினெட்டு பவுண்டு எடையுள்ள குண்டுகளுடைய துப்பாக்கிகள் வரும்வழியில் கடலில் மூழ்கிவிட்டது என்ற செய்தி தெரிவிக்கப்பட்டது. இரண்டு ஆறு பவுண்டு எடை குண்டுகளுடைய துப்பாக்கிகள் கரையை அடைந்தன. எனினும் தூத்துக்குடியில் டச்சுப் பிரதிநிதிகளால் அவை தடுக்கப்பட்டுவிட்டன என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த எதிர்பாராத செய்தி அரசனின் எதிர்வாதத்திற்குச் சாதகமாயிருந்ததன்றி அவன் உதவியின் சிறப்பையும் உணர்த்துவதாயிருந்தது. ஏனெனில், அந்த நாட்டிலுள்ள மிகச் சிறந்த கூலிப்படைகளும் ஒன்றாகத் திரண்டு துணை செய்யத் தக்க ஆள்வலியுடைய பூலித்தேவரை அடக்க மகம்மது யூசுபுனுடைய படை மட்டுமே போதுமானதல்ல. எனவே அவன் அரசன் கேட்ட நாடுகளை அவனுக்குக் கொடுத்துவிட்டான். அதைச் சென்னைத் தலைவனும் ஏற்றுக் கொண்டான். ஆனால் நவாபோவெனில் யூசுபு முதலில் அரசனைச் சந்தித்தபோதே பின்னால் தனது சொந்தப் பேராசை எண்ணங்களுக்கு எதிர் காலத்தில் அவனுடைய உதவியைப் பெற வேண்டுமென்று விரும்பி முன்னமேயே அந்த நாடுகளைத் தருவதாக வாக்குறுதி கொடுத்திருக்க வேண்டுமென ஐயப்பட்டார்.

இந்த உடன்படிக்கை எற்பட்டதும் மறுபடியும் திருவாங்கூர்க்காரர் படை அவனுடைய துருப்புகளுடன் சேர்ந்து கொண்டன. நவம்பர் 16 ஆம் தேதி அவர்கள் பூலித்தேவரைச் சார்ந்தவர்களுள் ஒருவரான எசல் தேவரின் (ஈஸ்வர் தேவர் என்ற பெயராயிருக்கலாம் - கால்டுவெல்லுக்கும் பெயர்களின் உண்மை வடிவத்தைக் காண்பதில் இருந்த ஆர்வம் காண்க - ந.ச.) கோட்டையையும் காட்டையும் முற்றுகையிட்டனர். கூலிப்படைகள் காட்டை மூன்று நாட்கள் காத்துச் சண்டையிட்டனர். பின்னர் இரண்டையும் விட்டுவிட்டு நெல்லித் தங்கவில்லிக்குத் (நெல்கட்டுஞ் செவ்வலுக்கு) திரும்பிவிட்டனர். இவ்வெற்றிக்குப் பின் வெடிமருந்து முதலியவை இல்லாமல் திண்டாடினர். மகமது யூசுப் மதுரை பாளையங்கோட்டை அன்ஜன்கோ முதலிய இடங்களிலிருந்து வெடிமருந்து சரக்குகள் வரும்வரை அங்கேயே தங்கும்படி நேரிட்டது. பழக்க வழக்க மாறுபாடுகளினால் மனவேற்றுமை ஏற்படாதிருக்கத் திருவாங்கூர்ப் படைகள் தனியாகப் பாடியிறங்கியிருந்தனர். என்றாலும் மகமது யூசுப் கண் பார்வையிலேயே