பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

199 கால்டுவெல்

எடை குண்டுள்ளவைகளும் இன்னும் அதற்குக் குறைவான எடை குண்டுள்ள பீரங்கிகளுமே. ஆனால் அதிகப்படியான பீரங்கித் தாக்குதலால் 18 பவுண்டு எடை குண்டுள்ள பீரங்கியை மாட்டின மறுநாளே அதை வெடித்துத் தீர்த்துவிட்டனர். அதற்குள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான சிறிது மருந்துகளை மட்டும் உள்ளுணர்வால் மீத்துவைத்துக் கொண்டு எஞ்சிய எல்லாவற்றையும் வெடித்து விட்டனர். எனினும் கோட்டையின் கைவாரச் சுவரின் ஒரு பகுதி சுடப்பட்டதால் வீழ்ந்தது. மகமது யூசுபு மறுநாள் முற்றுகையிடத் தீர்மானித்தான். போர்க்களத்தில் இரு பக்கத்தினரும் காத்திருந்தனர். அப்போர் தொடங்கிய உடனே நெல்லித் தங்கவில்லியிலிருந்து (நெற்கட்டுஞ்செவ்வலிலிருந்து) இரவோடு இரவாய்ப் பூலித்தேவர் தலைமையில் புறப்பட்டு வந்த 3000 தேர்ந்த கூலிப்படைகள் காட்டிலிருந்து வெளிப்பட்டு மகமதுயூசுபுனுடைய பாசறையைத் தாக்கி அதைக் காத்து நின்றபடையினரை விரட்டிவிட்டு அதற்கு எல்லாவிதமான அழிவையும் விளைவிக்கத் தொடங்கிற்று. மகமது யூசுபு ஒரு பெரிய படையை அனுப்பி அவர்களை எதிர்க்கச் செய்து விட்டுத் தன் முற்றுகையைத் தொடர்ந்து நடத்தினான். வழக்கமான வீரர் கூச்சலிலிருந்தும், சங்கு ஒலியிலிருந்தும் அறிவிக்கப்பட்ட பூலித்தேவரின் வெற்றியிலிருந்து கோட்டைக்கு உள்ளிருந்த படையினர் இரட்டிப்பு அளவு உற்சாகமடைந்தனர். அதேபோல் காட்டில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கூலிப்படை அவ்வளவும் ஏதோ அழைப்புப் பெற்றதுபோல் தோன்றும் வெவ்வேறு கூட்டங்களாக விரிந்த கோட்டைக்கருகிலிருந்த பீரங்கிப்படையிடமும் வெடிப்புகளுக்கருகேயும் இருந்த துருப்புகளையும் தாக்கின. தொடர்ந்து விரட்டப்பட்டதெனினும் தொடர்ந்து எதிர்த்துப் போராடி காவல் படையினர் உறுதியுடன் மாலைவரை கோட்டையைக் காப்பாற்றினர். பின்னர் இரவில் புதுத்தாக்குதல் ஆரம்பிக்கும் போது அதை எதிர்ப்பதற்காகக் காடுகளில் காத்திருந்தனர். ஆனால் சேமித்து வைத்திருந்த மருந்தில் பெரும்பாகம் பகல் பொழுதிலேயே செலவாகிவிட்டதால் கோட்டையின் எதிரே இனியும் தங்கியிருந்தால் ஆபத்தானது என்பதை உணர்ந்த மகமது யூசுபு தன் படையைப் பின்வாங்கச் செய்தான். அவனுடைய துருப்புகளிலும் திருவாங்கூரார்களிலும் இரு நூறு பேர் கொல்லப்பட்டனர். எதிரிகள் பக்கத்தில் இன்னும் அதிக இழப்பு ஏற்பட்டது. மறுநாள் அவன் சிறிது தூரம் தன் படையை நடத்திச் சென்று திருவாங்கூர்காரர்களை அனுப்பிவிட்டான். அவர்கள் செங்கோட்டை கணவாய் வழியாகத் தங்கள் நாட்டிற்குச் சென்றனர். மகமது யூசுபு தனது சொந்த