பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

203 கால்டுவெல்


திருநெல்வேலி டிரஷரி (Treasury) அலுவலகத்திலும் அரசாங்கக் காரியாலயங்களிலுமுள்ள ஆவணங்களிலிருந்து என்னுடைய பரிசோதனையின்மேல் சேகரிக்கப்பட்ட செய்திகளையே இக்காலத்திற்குப் பிறகு நடந்த சம்பவங்களுக்கான ஆதாரமாக நான் கொள்ள வேண்டியிருந்தது.

திருநெல்வேலியில் நவாபின் வரிவசூல் நிருவாகம்

1744 இல் நைசாமல் அன்வருதீன்கான் நியமிக்கப்பட்ட போது, கர்நாடக மாவட்டங்களைப் போலவே திருநெல்வேலியிலும் கர்நாடக நவாபின் ஆட்சி தொடங்கியதென ஏற்கனவே கண்டோம். அன்வருதீனால் நியமிக்கப்பட்ட அலுவலர்களின் வசம் தெற்கேயுள்ள அநேக மாவட்டங்கள் இருந்தன. அன்வார்கான் பஸ்டார், திருநெல்வேலி அமீத் இவர்களை நியமித்ததிலிருந்து திருநெல்வேலி வரிவசூலாட்சி கணக்கு ஆரம்பித்தது. 1802 மே 28 ஆம் தேதி கர்நாடகம் கம்பெனியார்வசம் மாற்றப்பட்ட சமயத்தில் திருநெல்வேலி கலெக்டராயிருந்த லூவிங்டன் மேற்படி தேதியில் வரிவசூல் இலாகாவிற்கு எழுதிய கடிதத்தை இங்கு எடுத்துக்காட்டுகிறேன். இதில் 1744 முதல் 1783 வரை திருநெல்வேலியில் வரிவசூல் நிர்வாகிகளாயிருந்தவர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

அன்வார்கானுக்குப் பின் மிர்குலாம் குசேன்கான், குசேன் முகம்மது கான் ஆகிய இருவரின் கூட்டு ஆட்சி 1749 முதல் 1844 வரை ஆறு ஆண்டுகள் நடைபெற்றன. அவன் ஒவ்வொரு ஆண்டிலும் நடைபெறும் ஜமாபந்தியின் செலவைச் சக்கரங்களில் கொடுத்திருக்கிறான். நான் அவற்றை விட்டுவிட்டேன். அன்வாருதீன் போரில் கொல்லப்பட்டபோது, ஆலம்கான் என்ற ஒரு உள்நாட்டு வரிவசூல் அலுவலர், திருநெல்வேலிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி சந்தாசாகிபால் அனுப்பப்பட்டான். அவனுடைய தலைவரின் பெயரால் அவன் 1750 முதல் 1751 வரை ஆட்சி செய்தான். அவனுக்குப் பின் சிறிது காலத்திற்குத் தீர்த்தாரப்ப முதலியும் சந்தா சாகிப்பின் பிரதிநிதியான முண்டிமையா (மூடிமையா)வும் தொடர்ந்தனர். மூடிமையா திருநெல்வேலிக்கருகே கொல்லப்பட்டான். அவன் மரணத்திற்குப் பின் மக்புசுகானின் மூத்த சகோதரனும், சிறிது காலம் நவாபின் பிரதிநிதியாகவும் இருந்த முகம்மது அலிகானின் அதிகாரம் 1754 - 1755 வரை நாட்டில் ஏற்பட்டது. மக்புசுகான் நவாபிடமிருந்து தன்னிச்சையாகப் பிரிந்து செல்லத் திட்டமிட்டான். இப்பேராசைச் செயலை நுட்ப அறிவுடைய யூசுப்கான் அறிந்து பேராசைத் திட்டங்களை ஒழித்து மகமது அலிகானுடைய ஆட்சியை