பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

207 கால்டுவெல்


சரணடைந்தால் அவனுடைய உயிரும் உடமைகளும், காப்பாற்றப்படுமென்றும் அவனுக்குப் பதிலிறுத்தனர்.

அக்டோபர் மாதத்தில்தான் முதல் தடவையாக அரசாங்கத்தார் அவன் மேல் ஐயப்பட்டனர் என்று தெரிகிறது. சில ஐரோப்பியப் படைகள் அன்ஜன்கோவிலிருந்து சென்னைக்குத் தரை வழியாய்ச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அவர்களுக்கு மறு ஆணைகள் வரும் வரை அன்ஜன்கோவிலிலேயே இருக்குமாறு கட்டளையிடப்பட்டது. ஏனெனில் யூசுபுகான் அப்படையினரை எப்படியேனும் தவிர்த்து விடுவான் என்ற அச்சமேயாகும். ‘யூசுபுகானுடைய நோக்கங்களைப் பற்றி நாங்கள் தெளிவாய் ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவன் நவாபுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தினின்றும் விலகும் நோக்கம் உடையவனாயிருக்கிறானோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்’ என்றும் அவர்கள் கூறினர். டிசம்பரில் தஞ்சாவூரிலும் தொண்டைமான் நாட்டிலும் துருப்புகளைத் திரட்டுவதாகத் தெளிவாக உறுதி செய்யப்பட்டபின், பல ராஜாக்களும் மற்றவர்களுக்கும் அவர்களை எச்சரித்து அவனுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாதெனக் கண்டித்துக் கடிதம் எழுதினர்.

மகமது யூசுபுகான் ஒப்பந்தத்தை மீறினதற்கான காரணங்கள் ஆவணங்களிலும் இல்லை. அவன் நவாபுக்கு எரிச்சலூட்டியதாக நினைத்தார்கள் என்றே தெரிகிறது. இறுதியில் நவாபின் ஆதரவாளராகிய ஆங்கிலேயரையே, திருநெல்வேலி மதுரை நாடுகளைத் தனக்குக் குத்தகைக்கு விடாமையால், எதிர்த்துக் கொண்டான். அவனுடைய முக்கியமான காரணம் அவனுடைய இரு எசமானர்களையும் எதிர்க்கத்தக்க வலிமை பெற்றிருப்பதாக நம்பியதோடு தனக்கு முன்னால் இருந்த மற்ற வெற்றியடைந்த படைத்தலைவர்களைப் போலவே தானும் தனியாய் தன்னிச்சையாய் உரிமை பெற எண்ணியிருக்க வேண்டும். இதைப் போன்று தன்னம்பிக்கையற்றவர்களுக்கு மிகச் சமீப காலத்திய மேற்கோள்கள் சந்தா சாகிபு, ஹைதர் அலி ஆவார்கள். திறனற்ற ஆர்க்காட்டு நவாபையும் அதிலும் மோசமான மைசூர் ராஜாக்கள் போன்றவர்களையும் சமாளிக்க வேண்டியிருந்தால் அவன் எண்ணப்படி அவன் கொள்கையில் வெற்றிகண்டிருக்க முடியும். ஆனால் அவன் ஆங்கிலேயர்களிடமல்லவா ஈடுகொடுக்க வேண்டும்! நீண்ட காலம் ஆங்கிலேயரிடம் ஊழியம் செய்தும் அவர்களது உண்மையான வலிமையறியாது அவர்களையும் வெற்றி காணலாமென அவன் தவறாக எண்ணிவிட்டான்.