பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 214


கைப்பற்றப்பட்டது. கம்பெனித் துருப்புகள் இல்லாத சமயத்தில் 3 அல்லது 4 நூறு கூலிப்படைகள் திருநெல்வேலி நகரைக் கொள்ளையடித்தது. நவாபின் ஆட்கள் உதவியற்றிருந்தனர். பனங்குடி, திருக்குறுங்குடி இரண்டையும் காத்து நின்ற சிறுபடை அவற்றைத் திருவாங்கூராருக்கு விட்டுவிட்டு ஓடிவிட்டன. அடைக்கலமடைந்தவர்கள் பாளையங்கோட்டையை நோக்கிப் பின்வாங்குவதாக வாக்குறுதி கொடுத்தனர். நவாபின் படையும் செங்கோட்டையைத் திருவாங்கூர்க்காரருக்கு விட்டுவிட்டன. ஜூன் 12 ஆம் தேதி திருவாங்கூர்காரர்கள் களக்காட்டிலிருந்து திரும்பினர். அவர்கள் திருக்குருங்குடியில் தங்கினர். அவர்கள் ஆரல்வாய் மலைக்குத் (Aramboly lines) திரும்பும் போது, கர்னல் காம்பெல் அவர்களை எதிர்த்துப் படையெடுக்கத் தயார் செய்து கொண்டிருந்தான். பாளையங்கோட்டை அதிகாரிகள், விடுதிகள் போதுமானதாக இல்லை என்றும் அரசாங்கத்தார் உத்தரவின் மேல் நவாபின் செலவில் அவை சீர்திருத்தப்பட வேண்டுமென ஒரு முறையீடு அனுப்பினர். புது படைவீடு கட்டவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

1766-இச்சமயத்தில் பாளையங்கோட்டையில் காப்டன்பிரிச்மன் (Captain Frischman) படைத்தலைவனாகவும் திருநெல்வேலியில் கம்பெனியாரின் பேராளராகவும் இருந்தான். யூசுபுகானின் கடுமையான ஆட்சியினால் ஏற்பட்ட நன்மைகளுக்கெல்லாம் ஒரு முடிவு இப்போது ஏற்பட்டது. இத்துன்பத்துடன் கூட பாளையக்காரர்களை அடக்கி அவர்களிடம் வரிவசூல் செய்வதும் மேலும் இடையூறாயிருந்தது. கடந்த ஆண்டில் திருவாங்கூராருக்கு எதிராக அழைக்கப்பட்ட படை வடக்கே ஹைதரலியின் திட்டங்களை எதிர்க்கத் தேவை எனத் திரும்பிவிட்டன. இந்த எல்லாச் செய்திகளையும் காப்டன் பிரிச்மன் அக்டோபர் 4 ஆம் தேதி அரசாங்கத்தினருக்கு எழுதிய கடிதத்தில் எடுத்துக் காட்டியிருந்தான். இக்கடிதத்திலிருந்து அச்சமயத்தில் சுமார் 20,000 படைக் கலங்கள் தாங்கிய கூலிப்படைகள் பாளையங்கோட்டைக்கு 15 அல்லது 20 மைல் தூரத்திற்குள் திரிந்து அலைந்து ஒவ்வொரு கிராமத்தையும் சூறையாடியதாகத் தெரிகிறது. நவாபின் படைகளை பாக்சி (Buxy) - நவாபினுடைய தளகர்த்தர் பாக்சி, மகமதிய கமாண்ட் - இன் - சீப் தலைமையின் கீழ் வடகிழக்கேயுள்ள கோட்டையை ஐயமறப் பாஞ்சாலங் குறிச்சி கோட்டையை அடக்குவதற்காகக் காப்டன் பிரிச்மனை அனுப்பி வைத்தான். அப்படை மிக்க பலம் வாய்ந்தது. அதில் பீரங்கிகளும் 1000 குதிரை வீரர்களும் இருந்தனர். ஆயினும் அப்படை ஒன்றும் செய்யாமல் கோட்டைக்கு வெளியே காத்திருந்தன என்று காப்டன் பிரிச்மன் முறையிட்டான்.