பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

219 கால்டுவெல்


முக்கிய நோக்கம் கோட்டைக்குள்ளிருப்பவர்களைத் தப்பி ஓடவிடாமல் செய்ய வேண்டும் என்பது. ஆனால் அவன் எடுத்துக் கொண்ட எல்லாப் பாதுகாவலான முயற்சிகளையும் மீறி மே முதல் தேதி துப்பாக்கிக் குண்டுவீச்சு தொடங்கியவுடனேயே கோட்டைக்குள் இருந்தவர்கள் தப்பி விட்டதை அறிந்தான். இது கர்னல் காம்பெலுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. ஏனெனில் கலகக்காரக் கும்பலின் முக்கிய தலைவர்களைப் பிடித்தாலன்றி அவர்கள் கோட்டைகளைக் கைப்பற்றித் தரைமட்டமாக்குவதில் அதைத் திரும்பக் கட்டும் வசதியை அவர்களுக்கு ஏற்படுத்துவதைத் தவிர வேறு பலன் ஒன்றுமில்லை. மேலும் கோட்டைகளைத் தரைமட்டமாக்குவதற்கு அவன் செய்யும் செலவை விடக் குறைந்த செலவிலேயே அவர்கள் புதுக்கோட்டைகளை வெகு விரைவில் கட்டிவந்தனர்.

3 ஆம் தேதி கொல்லம் கொண்டானிலிருந்து சாத்துருக்குப் (சேத்துர் என்பது சாத்தூர் என்பதல்ல) படையுடன் சென்றான். அங்கு அவனுக்கு அதிக எதிர்ப்பு இருந்தது. எதிரிகளின் ஒரு பகுதிப்படை கோட்டைக்கு வெளியே ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு கர்னலின் படையின் ஒரு பகுதியைப் பெரிதும் தாக்கின. அவர்கள் சிறிது துன்பத்துடன் இடம்பெயர்ந்து கோட்டைக்கு ஒடும்படி விரட்டியடித்தனர். அதில் கர்னல் படையில் இரண்டு தலைவர்களும் 46 சிப்பாய்களும் காயமடைந்தனர். மூன்று சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். எதிரிகளில் 80 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயமடைந்தனர். கர்னல் காம்பெல் கோட்டையைச் சுற்றிப் பீரங்கித் தளவாய்களை நிறுத்தினான். ஆனால் பீரங்கிப்படை தாக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து முடிப்பதற்குள் இதையறியாத எதிரிகள் தங்கள் கோட்டைக்குள்ளிருந்து தப்பிக்க முடியாமல் அரணிடப்பட்டு தாக்கப்படப் போவதை உணர்ந்து இரவிலேயே தப்பிவிட்டனர். இதைக் கண்ட கர்னல் கார்ப்பர் தன் படையையும் நவாபின் குதிரைப் பட்டாளத்தையும் எதிரிகளைத் தொடரும்படி கட்டளையிட்டான். ஆயினும் அவன் கூறுவதாவது: 'ஹார்பரின் படைகளை விட நவாபின் குதிரைப்படையினர் மிக்க சுறுசுறுப்புள்ளவர்களாயிருந்தனர். பிந்திய குதிரைப்படைக்குப் பொதுவாக அவர்கள் நன்மை செய்வதைவிட நாசம் விளைவிக்கத் தக்கவர்களாயிருந்தனர். அவர்கள் அதிகப் படியானப் பொருள்களை வீணாக்கினரே தவிர எவ்வித நன்மையும் செய்ததாகத் தெரியவில்லை. அவன் நினைத்ததைவிட சாத்துர் மிக்க பலம் வாய்ந்த கோட்டை எனக் கர்னல் காம்ப்பெல் கண்டான். அக்கோட்டை பாளையங்கோட்டை அளவே பெரியதாயிருந்ததுபோல் அவனுக்குத் தோன்றிற்று. கோட்டை பலமான முள்வேலியினால் சூழப்பட்டிருந்தது.