பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 14

என்பது தீவைக் குறிக்கும் ‘தீபிகா’ என்ற வடசொல்லின் அராபியத் திரிபு). சிலாம் (Silam) என்பதிலிருந்து தமிழ் இலாம் (Ilam) பிறந்தது (இந்தியத் தரையோடு தொடர்புடையது என்னும் கருத்தில் இழுக்கப்பட்டது ஈழம் என்றும் ஈழவரோடு தொடர்புடையதால் ஈழம் என்று பெயர் பெற்றது என்றும் கூறுவர். இலங்கைக்கு செலத் தீவு என்ற பெயரும் உண்டு. - ந.ச.). ‘சிம்ஹா’ (Simha) என்பது சிங்கம். ‘சிம்ஹலா’ என்பது சிங்கத்தின் நாடு; அதாவது, சிங்கத்தைக் கொன்றவர்களது நாடு அல்லது சிங்கத்தைப் போன்ற மனிதர்கள் வாழும் நாடு என்று பொருள்படும். தம்பாபன்னி அல்லது வடமொழியில் சரியாக எழுதப்பெற்ற பெயராகிய தாம்ரபரணி (Tamraparini) என்பது விஜயனும் அவனுடைய கூட்டத்தினரும் இலங்கையில் குடியேறிய முதற் நிலப்பகுதிக்கு இடப்பட்ட பெயர் என்பதும் அப்பெயரிலிருந்து முழுத் தீவிற்கும் அப்பெயர் வந்தது என்பதும் மகாவமிசத்தில் குறிக்கப்பட்டுள்ளன.[1] இந்தக் குடியிருப்பு, சிலோனின் மேற்குக் கடற்கரையிலுள்ள புட்லம் (Putlam) என்ற ஊரின் அருகே உள்ளது என்பது தெரிகிறது. இது ஏறக்குறைய திருநெல்வேலியின் முக்கிய ஆற்றின் கூடுதுறைக்கு எதிரே அமைந்துள்ளது. இந்த இரு பெயர்களும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாஸ்டனும் இங்கிலாந்தின் பாஸ்டனும் போல, பொதுவான ஒரு மூலத்திலிருந்து வந்திருக்க வேண்டும். ஒன்று மற்றொன்றிலிருந்து தோன்றியிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கொள்ளலாம். ஆற்றின் பெயர் குடியேற்ற நாட்டின் பெயரிலிருந்து பிறந்திருக்கலாம். அல்லது குடியேற்ற நாட்டின் பெயர் ஆற்றின் பெயரிலிருந்து பிறந்திருக்கலாம். ‘இவற்றுள் எதன் பெயர் பழைமையானது?’ என்பதே கேள்வி. திருநெல்வேலியிலுள்ள தாமிரபரணி ஆற்றின் கூடுதுறையிலுள்ள ஒரு குடியேற்ற நாடானது அம்மக்களால் இலங்கைக் கடற்கரையின் எதிர்ப்புறத்தில் நிறுவப்பெற்ற மற்றொரு குடியிருப்பிற்கு ஆகிவந்தது எனலாம். அல்லது விஜயன் கீழ்வந்த ஆரிய வீரர்கள் சிலோனில் குடியேறிய பின்னர்த் திருநெல்வேலி கடற்கரையிலும் புதியதொரு குடியிருப்பை ஏற்படுத்தி அக்கரையிலுள்ள முக்கிய ஆற்றுக்குத் தாங்கள் வசித்துவந்த நகரத்தின் பெயரையே வைத்திருக்கலாம் என்றும் கொள்ளலாம். பெரிய முக்கிய நிலப்பரப்பிலிருந்து சிறிய தீவுகளுக்குக் குடியேறுதல் என்பதே பொதுவான இயற்கை வழியாகும். பழங்காலத்திலேயே இதற்கு மாறாகவும் சிலபோதுகளில் நடந்திருப்பது தெரிகிறது. பின்னாள்களைப் போலவே பழங்காலத்திலும் இத்தகைய குடியேற்றங்கள் நடந்தன


  1. டர்னரின் (Turnour) மகாவமிசம், ப. 57 பார்க்க.