பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 222


நேரமில்லை என்றும் உடனடியாகச் சில உடன்படிக்கையாவது செய்து கொண்டால்தான் மக்களை நாட்டுக்கு வரும்படியும் நிலத்தை உழும்படியும் கேட்டுக் கொள்ள முடியுமென அவன் கருதினான். வாசுதேவ நல்லூர் கோட்டை பிடிபட்டதைப் பற்றி அரசாங்கத்தினர் மகிழ்ச்சியடைந்தனர் எனினும் அங்கு நவாபின் துருப்புகள் நிறுத்தப்பட்டிருப்பதை அவர்கள் விரும்பவில்லை. எனவே உடனே நவாபின் துருப்புகளுக்குப் பதிலாகக் கம்பெனித் துருப்புகளை நிறுத்திவைக்கக் கர்னல் காம்பெலுக்குக் கட்டளையிட்டனர்.

பாளையக்காரர்களுடன் சமாதானம் செய்து கொள்ள நவாபிடமிருந்து அதிகாரிகள் வரத் தாமதமானதால் கர்னல் காம்பெல், காப்டன் ஹார்ப்பரிடம் கூறி சங்கரநயினார் கோவிலில் ஒரு இராணுவ அமைப்பை ஏற்படுத்தக் கட்டளையிட்டான். ஜூன் மாதம் 13 ஆம் தேதி அவன் தன் வீரர்களுக்கு அவர்கள் ஐரோப்பியராயினும் சிப்பாய்களாயினும் மக்களை நியாயமாயும் அன்புடனும் இரக்கத்துடனும் நடத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றிச் சிறந்த குறிப்புகளுடன் எடுத்துக்காட்டி ஓர் அருமையான கடிதம் எழுதியிருந்தான். அதற்குப் பிறகு நவாபிடமிருந்து பாளையக்காரர்களுடன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தும்படி ஆணை சார்ந்த (அதிகாரப்பூர்வமான) கடிதம் வந்தது. உடனே கர்னல் காம்பெல் போராட்டங்களை நிறுத்தும்படித் தெரிவித்தான். பல பாளையக்காரர்களின் வக்கீல்களையும் பாக்கிகளைப் பற்றியும் இனி வருங்காலத்தில் ஒழுங்காகக் கப்பம் கட்டுவதைப் பற்றியும் அவர்களும் ஒரு முடிவுக்கு வர விவாதித்தான். கர்னல் காம்பெலுக்கு எது சிறந்ததெனப்படுகிறதோ அதைப் பாளையக்காரர் விஷயத்தில் செய்து முடிக்க கர்னல் காம்பெலுக்கு முழு அதிகாரம் கொடுக்கும்படி நவாபுக்கு அரசினர் பரிவுரை (சிபாரிசு) செய்தனர்.

கர்னல் காம்பெலினுடைய சமாதான உடன்படிக்கை வெகு நாள் நீடிக்கவில்லை. இரண்டு மாதங்களுக்குள் பாளையங்கோட்டையில் தளகர்த்தனாயிருந்த காப்டன் பிரிச்மன், கர்னல் காம்பெல் தன் படையுடன் நாட்டைவிட்டுச் சென்றவுடனேயே பல பாளையக்காரர்கள் அவர்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்ட கப்பப் பணத்தைச் செலுத்த முன்போலவே மறுக்க ஆரம்பித்து விட்டதாக அரசினருக்குத் தெரிவித்தான். இக்கீழ்ப்படியாமை செயலுக்குத் தலைவனாக இருந்தவன் சிவகிரி பாளையக்காரன். காப்டன் பிரிச்மன் மறுபடியும் ஒப்பந்தங்கட்கு உடன்படும்படி செய்வதில் வெற்றிபெற்றான். இதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளின் பெரும்பகுதி நவாபின்