பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

229 கால்டுவெல்


மன்னனிடமிருந்து பெறமுடியும் என்றும் அறிவித்திருந்தான். தூத்துக்குடி டச்சுக்காரர்களின் கொழும்பு அரசாங்கம் எல்லா ஐரோப்பியர்களுடைய பொது எதிரியாக விவரிக்கப்பட்ட ஹைதர் அலியை ஒழிக்க உதவி செய்வதாக உறுதி கூறியது. ஆனால், சிறிது காலத்திற்குப் பின் அவர்கள் மாறுபாடாக நடந்து கொண்டவிவரத்தைக் காணலாம் .

பிப்ரவரியில் காப்டன் எடிங்டன் லெப்டினன்ட் கால்காட் (Ralcolt)டுடன் மூன்று கம்பெனிப் படையை திருவில்லிபுத்தூர் கோட்டையைக் கைப்பற்றவும், இதன் மூலம் கலகக்காரரான சிவகிரி பாளையக்காரனைக் கண்டிக்கவும் திருநெல்வேலியின் உயிர்நாடியாகிய இடமென்று கருதப்பட்ட ஒரு இடத்தைக் கைப்பற்றவும் அனுப்பினான்.சிவகிரியின் உண்மையான தலைவன் அச்சமயத்தில் பாளையங்கோட்டை சிறையிலிருப்பதாக அவன் குறிப்பிட்டிருந்தான். லெப்டினண்ட் கால்காட் மதுரைக்கருகில் 3OOO

கூலிப்பட்டாளத்தினாலும் 3 அல்லது 4 நூறு குதிரைவீரர்களாலும் தாக்கப்பட்டான். அவர்களை ஆள் இழப்புடன் முறியடித்தான். அவனுக்கும் சிறிது ஆள் இழப்பு ஏற்பட்டது. நவாபிற்கும் பிரிட்டிஷாருக்கும் எதிராகப் பாளையக்காரர்களைத் தூண்டிவிடுவதற்காக ஹைதர் அலி பாளையக்காரருக்குத் தூதர்களை அனுப்பியதால் முக்கியமான பாளையக்காரர்களுடன் அவன் உடன்படிக்கை பேசியதாகவும் அதிலிருந்து பாளையக்காரர்கள் சிறையிலிருக்கும் அவரவர்களுடைய உறவினர்களை விடுவித்துவிட்டால் ஒப்பந்தத்திற்கு உடன்படுவார்கள் என்று அறிந்ததாகவும் காப்டன் எடிங்டன் குறிப்பிடுகிறான். இராமநாதபுரம் நாட்டில் கூலிப்பட்டாளத்தினால் தாக்கப்பட்ட படைகளுக்குப்பதிலாக 2000 ஆள்களடங்கிய படையை அவன் கேட்டிருந்தான். அந்த ஆண்டின் பிற்பகுதியில் டச்சுக்காரர்கள் தூத்துக்குடியை வலுப்படுத்தினர். அதன்வாயிலாக ஆங்கிலேயருடன் சண்டையிட வெளிப்படையாகத் தயார் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் டச்சுப் படைக் கொடியை வெளிப்படையாக உயர்த்திய பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்ம நாயக்கனுக்கு மிகப் பெரிய உதவி அளித்து வந்தனர். இந்தப் பாளையக்காரன் நூறு ஆள்கள் இழப்புடன் இராமநாதபுர நாட்டிலுள்ள கமுதிக் கோட்டையில் முறியடிக்கப்பட்டான். அக்டோபரில் அவனுக்கு எதிராக ஏற்பட்ட குற்றச்சாட்டுகளால் காப்டன் எடிங்டன் விலக்கப்பட்டு, காப்டன் பில்கிளிப் (Bilcliffe) நியமிக்கப்பட்டான்.