பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 234


மற்றொரு கடிதம் மதுரையில் அதைப் போன்ற மற்றொரு பொறுப்பை ஏற்கும்படி செய்தது. வேறொன்று இராமநாதபுர வட்டத்தில் அதே உரிமையை அளித்தது. நவாப் திருநெல்வேலியிலிருந்த அவனுடைய பஸ்தார்கள் (Fauzdars) அமில்தார் (Amildar)களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிக்குக் கீழ்ப்படியும்படிக் கட்டளையிட்டான். சென்னை அரசாங்கத்தினரோவெனில் அவனுக்குத் தேவையான எந்த இராணுவ உதவியையும் உடனே செய்து தரும்படி காப்டன் எடிங்டன் (Captain Eidington), லெப்னைண்ட் கர்னல் நிக்சன் (Lieutenant Colonel Nixon) என்பவர்களுக்குக் கட்டளையிட்டனர். அவனுக்கு உதவியாளராக உயர்திரு. ஆர்பன் (Mr Orpen) அவனுடன் சென்றார்.

1782 - சிவராம தலைவன் என்ற பாளையக்காரன் திருக்குருங்குடிக்கு அருகில் திருக்குருங்குடிக் கோட்டை ஒன்றைக் கட்டி அதன் சுற்றுப்புறத்தைக் கொள்ளையடித்து வந்தான். அந்தக் கிலேதார் ஒரு பிரிவு படையை அனுப்பினான். அப்படை கோட்டையைக் கைப்பற்றி அதை அழித்தது. அந்த இடத்தில் வலிமை மிக்க மறவர் குடும்பத்தின் தலைவனுக்குப் பரம்பரைப் பெயர் 'சிவராம தலைவன்' என்பதாகும்.

டச்சுக்காரருக்கும் இங்கிலிஷ்காரருக்கும் போர் தொடங்கியவுடன் பாளையங்கோட்டை படைத்தலைவனான காப்டன் பில்கிளப் (Captain Bilcliffe) லெப்டினன்ட் வீலரின் (Mr. Wheeler) தலைமையில் ஒரு படையைத் தூத்துக்குடியைக் கைப்பற்ற அனுப்பினான். டச்சுக்காரரின் சிறிய காவற்படை கைதானது. பதினேழு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. காவற்படையுடனிருந்த பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த 200 மனிதர்கள் ஆங்கிலத் துருப்புகள் நெருங்கி வருவதை அறிந்து ஓட்டம் பிடித்தனர். டச்சுக்காரருக்காகப் போரிட அவர்கள் அக்கறைப்படாததே இதற்கும் காரணமாயிருக்க வேண்டும். ஏனெனில் அவர்களுடைய சொந்தக் கோட்டைகள் தாக்கப்படும் பொழுது அவர்களின் நடவடிக்கைகள் மிக்க மாறுபாடுடையதாயிருக்கும். புன்னைக்காவல், மணப்பேடு முதலிய இடங்களில் உள்ள டச்சுக்கார ஆலைகள் அழிக்கப்பட்டன. தூத்துக்குடியில் டச்சுக்காரர்களால் கட்டப்பட்ட புற அரண்களும் அழிக்கப்பட்டன. தூத்துக்குடியில் எந்த டச்சுப்படை இறங்கினாலும் உடனே அவர்களை எதிர்த்து அழிக்க வேண்டுமென்று கட்டளையிடப்பட்டது. தூத்துக்குடி பூர்வீக மக்கள், முக்கியமாகப் பரவர்கள், வீலரின் தலைமையில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் டச்சுக்காரரின் உடைமைகளுடன் தங்களுடையதும் கைப்பற்றப்பட்டதைப் பற்றியும் நகரத்திற்குத்