பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 240


நடைபெற்றதாய் அவர் குறிப்பிடும் நிகழ்ச்சிகள் 1777 இல் காப்டன் பிக்கார்டு (Captain Pickard), 1778 இல் காப்டன் பாரிங்டன் (Captain Barringhton) இவர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகும்.

ஆகஸ்டில், அரசாங்கத்தார் திரு. இர்வினுக்கு, அவனது சிறந்த யோசனைப்படியே திருநெல்வேலி வரிவசூலைக் குத்தகைக்கு விடுவதற்கான முழு அதிகாரத்தையும் கொடுத்தனர். திருநெல்வேலி நாட்டை ஒழுங்குபடுத்தத் தென்படையின் ஒரு பகுதியைக் கர்னல் புல்லர்ட்டன் தலைமையில் தனக்குத் தேவையென்று அடிக்கடி கர்னலுக்கு எழுதிக் கொண்டிருந்தார். அரசாங்கத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்தக் கடிதங்கள் கர்னல் புல்லர்ட்டனின் படையெடுப்புக்கு வழி கோலியது. இந்தப் படையெடுப்பைப் பற்றி கர்னல் புல்லர்ட்டனே ஒரு வரைப்படவிளக்கத்தைத் தருகிறார். சென்னை அரசாங்கத்தினருக்கு அனுப்பப்பட்ட அவனுடைய திறமைவாய்ந்த அந்த அறிக்கை ‘இந்தியாவில் ஆங்கிலேயருக்குள்ள பற்றுகள் பற்றிய ஒருநோக்கு’ (A View of the English interests in India) என்ற தலைப்புடன் 1867 இல் சென்னையில் மறுபதிப்பாக வெளியிடப்பட்டது. அது போதுமான அளவு பயனைத் தரும்.

தனது படையெடுப்புப் பற்றி கர்னல் புல்லர்ட்டனே கூறும் விவரங்கள்

'மதுரை மேலுர், பழமநேரி மாவட்டங்கள் கூலிப் பட்டாளம், பாளையக்காரர், எதிரிகள் முதலியவர்களால் தாக்கப்பட்டு வந்ததால் உங்களுடைய துருப்புகளும் மக்களும் கோட்டைகளை அடுத்துள்ள இடங்களில் தாக்கப்பட்டனர். காவற்காரர்கள் காவல் செய்யும்போது சுடப்பட்டனர்; திருநெல்வேலி பாளையக்காரர் அனைவரும் கலகத்தில் ஈடுபட்டிருந்தனர்; அன்றியும் கொழும்பிலுள்ள டச்சு அரசாங்கத்தினரிடமும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். அங்கிருந்து அவர்களும் மாப்பிள்ளை தேவரும் சேர்ந்து அந்த நாடுகளையும் மறவர் அரசுகளையும் ஒடுக்க எல்லாத் திட்டங்களையும் சிந்தித்து வந்தனர். ஏறக்குறைய ஒரு நூறு ஆயிரம் பாளையக்காரர்கள், கூலிப்பட்டாளம் எல்லாம் ஆயுதம் ஏந்தித் தென் மாகாணங்கள் எங்கும் இருந்தனர். இவர்கள் அரசாங்கத்திற்குப் பகைவராகக் கருதப்பட்டனர். இவர்கள் தங்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகப் பொது குழப்பங்களை எதிர்நோக்கி இருந்தனர். உங்கள் தென்படை அவர்களுடைய தொந்தரவுகளை அடக்கி உங்கள் கடமைகளைச்சரிவரச் செய்ய உதவுவதற்குப் போதுமானதாக இல்லை. கஜானாக்கள் காலியாகிக் கொண்டிருந்தன. மக்கள் தொகை குறைந்தது.