பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 16

வழக்கத்திற்கு முரணாயுள்ளது. கிறித்து பிறந்த ஆண்டிலிருந்து கணக்கிடப்படும் காலத்திலே தான் தென்னிந்தியாவில் கிரேக்க வணிகர்களின் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டது. இதைவிடப் பழைமையான காலத்தது மகாபாரதம். மகாபாரதத்தில் இவ்வாற்றைப் பற்றி வரும் பகுதியை மட்டும் பிற்காலத்தவர்கள் தனிப்பட்ட காரணங்களாற் புதிதாகச் சேர்த்திருப்பார்கள் என்று எண்ணத்தக்க ஏதுவில்லை. புராணங்களில் பூகோளக் காரணங்கள் பற்றி வரும் பெயர்ப் பட்டியலிலும் இவ்வாற்றின் பெயர் சாதிசமயச் சார்பற்றதாகவே காணப்படுகிறது. எனவே, கிரேக்கர்கள் இவ்வாற்றைச் சோலன் என்று வழங்கிய போதிலும் உள்நாட்டவராலேனும் அல்லது பிராமணர்களாலேனும் இது தாமிரபரணி என்றே வழங்கப்பட்டு வந்திருக்க வேண்டுமென்பது தெரிகிறது. இதை எவ்வாறு விளக்குவது? முக்கிய ஆற்றின் பழைய பெயர் சிலாறு (Sylaur) என்றும் அதுவே இப்பொழுது கிளையாற்றின் பெயராய் இருக்கிறது என்றும் லாஸன் என்பார் கருதுகிறார். ஆனால், சிலாறு என்னும் பெயர் ஏதேனும் இருப்பதாகவோ, என்றேனும் அத்தகைய பெயர் வழக்கிலிருந்ததாகவோ தெரியவில்லை. சுமார் 1810 ஆம் ஆண்டுவரை ஆங்கிலேய அலுவலர்களால் சித்தாறு (Sittaur) என்று வழங்கப்பட்ட ஆறே அத்தகைய தவறுதலான பெயராகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமென்று நான் எண்ணுகிறேன். ‘த’ என்னும் எழுத்திற்குப் பதிலாக ‘ல’ என்னும் எழுத்து வந்திருப்பதே தவறுதலுக்குக் காரணம். நம் காலத்தில் இந்த ஆறு சாதாரணமாகச் சிற்றாறு என்றே எழுதப்படுகிறது. இது சித்தாறு அல்லது சிற்றாறு. அதாவது சிறிய ஆறு என்பதைக் குறிக்கும், கிளை ஆறு மிகக் குறைவான மலை நாடுகளில் பாய்வதால் முக்கிய ஆறாய் இருந்திருக்க இயலாது என்பது வெளிப்படை. சோலன் என்ற சொல்லுக்குக் கிரேக்க மொழியில் பொருள் இருப்பதால் அது கிரேக்கச் சொல் என்று கொள்ளலாம், அதன் ஒரு பொருள் ‘கிளிஞ்சில் மீன்’ என்பது; இப்போதைப் போல முன்பு அதிகப் படியான கிளிஞ்சிற்சங்குகள் கூடுதுறையில் கிடைத்ததால் கிரேக்கர்கள் அப்பெயரை வழங்கியிருக்கலாம் என்று நாம் கொள்வது இன்னும் சற்றுத் தெளிவான விளக்கத்தைத் தரக் கூடும். இக்காலம் வரை வாணிகத்திற்குப் பயன்படும் ஏராளமான சங்குகள் தாமிரபரணி ஆற்றின் கூடுதுறைக்கு அருகேயுள்ள கடலிலேதான் காணப்படுகின்றன. அங்கே கூடுதுறை உருவாகிக் கொண்டிருந்த பழங்காலத்திலேயே கணக்கற்ற சங்குகள் கிடைத்தன என்பதற்கு அண்மையில் வயல்களின் வண்டல் மண்ணிற் புதைந்து கிடக்கும் சங்குகளே சிறந்த சான்றாகும். இந்தியா முழுவதும் சங்குகள் இசைக் கருவியாகப் (ஒலி செய்யும் கருவியாக) பயன்பட்டு