பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

243 கால்டுவெல்


கோணத்தில் கோட்டையை நோக்கிப் பீரங்கிகளை அணி வகுத்தனர். விரைவாகப் பீரங்கிப்பட்டாளம் ஆயத்தம் செய்யப்பட்டது. மூன்று மணி நேரத்தில் கோட்டையைப் பீரங்கியால் தாக்க நாங்கள் ஆயத்தமாகிவிட்டோம். கோட்டையும் சுற்றுப்புறங்களும் பல ஆயிரம் மக்களால் பலப்படுத்தப்பட்டிருந்தது. அவர்களுடைய ஒவ்வொரு சூழ்நிலையும் பீரங்கித் தாக்குதலை எதிர்க்க ஆயத்தமாவதைக் காட்டியது. மேலும் பீரங்கிகளைச் சுட்டு அச்சமுறுத்துவதன்றி கட்டபொம்மநாயக்கன் தன் கூட்டாளித்தலைவர்களுடன் வந்து எங்கள் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமலிருப்பதற்காகவும் தாக்குதலை விரைவுபடுத்த வேண்டியதாயிற்று. கோட்டையைத் தாக்க பீரங்கிகளை வெடித்தாயிற்று. ஆனால் கோட்டைச் சுவர்கள் கனம் எங்களைப் பின்னிடச் செய்தது. எனவே கோட்டையை அடுத்துள்ள படல்களைத் தரைமட்டமாக்கிவிட்டால் எதிர்ப்பவர்களை மடக்கிவிடலாமென்று தீர்மானித்தோம்.

அவர்கள் இடைவிடாது குறி தவறாமல் நெருப்பு மழை சொரிந்தனர். எங்களுடைய இந்த மிக உயர்ந்த முயற்சிகளை அறியாது கோட்டையில் விரிசல் ஏற்படுவதற்கு முன்பே இருள் சூழ்ந்துவிட்டது. எனவே சந்திரன் புறப்படும்வரை தாக்குதல் நிறுத்தப்பட்டது, பீரங்கி வெடித்தவர்களில் ஐரோப்பிய கூட்டம் இரண்டும் அவர்களின் உதவிக்காக 13வது 24வது கர்னாடகப் படை அணிகளும் பின்புறத்தில் இருந்தன. முதல் குதிரைப்படையையும் சிறிய காலாட்படை அணியையும் கோட்டையில் மற்ற முக்கியமான மூன்று கோணங்களுக்கும் செங்கோணத்தில் வாயில் பக்கத்தை நோக்கி நிறுத்தி வைத்தனர். இதனால் கோட்டையின் ஒவ்வொரு வாயில் பக்கத்தையும் நோக்கி அப்படைகள் இருந்தமையால் முற்றுகையிட்டோர் படைகள் குறிபார்க்க வாய்ப்பற்ற இடத்திலிருந்தபடி வீட்டைத் தாக்குவதில் ஈடுபட்டிருக்கும்போது, உணவுகளைப் பெறுவதையும் அவர்கள் தப்பி ஓடுவதையும் தடுப்பதற்கு வசதியாயிருந்தது.

எங்களுடைய அடுத்த நோக்கம் பிளவை நோக்கியிருந்த பலம் வாய்ந்த வேலியை அகற்றிவிட்டு முழு கோட்டையையும் சூழ்ந்து கொள்ள வேண்டுமென்பது, இதுதான் தற்காப்புக்காகப் பாளையக்காரர்கள் எதிர்த்துப் போரிடும் முறை. இத்தகைய பயங்கர முயற்சி இரவு 10 மணி அளவில் சந்திரனின் ஒளியில், முன்னோடிகளின் படைத்தலைவனாகிய என்சைன் கன்னிங்காம் (Ensign Cunningham) என்பவனின் அசாதாரண திறமையினால் செயல்படுத்தப்பட்டது.