பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 244


முற்றுகை தொடங்கியது. வெடிப்பின் உச்சியை எங்கள் துருப்புகள் அடைந்தவுடன் மேலும் உயரே செல்லவோ அல்லது அங்கேயே ஒதுங்கவோ போதுமான இடமில்லாததைக் கண்டனர். எதிரிகள் அதிக எண்ணிக்கையுடையவர்கள். அவர்கள் வேல், கம்பு, சிறு துப்பாக்கிகளால் மிக அச்சந்தரத்தக்க விதத்தில் எதிர்த்து இறுதியில் நாங்கள் பின்வாங்கும்படி செய்தனர். இருதிறத்தினரிலும் அதிகப்படியான கொலைகள் ஏற்பட்டன. பிறகு எங்கள் படை அணிவகுப்பை அடைந்தது. தாக்குதலைப் புதுப்பிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் பாளையக்காரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பினால் மனந்தளர்ந்து, கோட்டையை விட்டுவிட்டுக் கிழக்குவாயிலை நோக்கிப் பாய்ந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த படைகள் முந்திய தாக்குதலில் ஈடுபட்டுக் களைத்திருந்தமையால் புறங்காட்டி ஓடியவர்கள் எளிதாய்த் தப்பிவிட்டனர். மற்றவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். பிளவுபட்ட கோட்டையில் எங்கும் இறந்த பிணங்கள் கிடந்தன. அங்கு தரவாரியாக துப்பாக்கிகளும், வெடி மருந்துகள், குண்டுகள், ஆயுதங்கள், மற்ற இராணுவ வெடிமருந்துப் பொருள்களும் இருந்தன. அவை பொதுக் காரியங்களுக்குப் பயன்பட்டது. அங்கு கண்டெடுக்கப்பட்ட 40,000 நட்சத்திர பகோடாக்களும் (Star Pagodas) உடனே துருப்புகளுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. பரிசுத் தொகைபோல வழங்கப்பட்ட இச்செயலை உங்கள் போர்டு மகிழ்வோடு உறுதிப்படுத்தியது. அல்லாமலும் எங்களுடைய எதிர்கால நடவடிக்கைகளில் படைகள் உற்சாகத்தோடு ஈடுபடும்படி செய்ய இதைப்போன்ற வேறு ஒரு காரியம் இருக்க முடியாது. மேலும் இந்த விவகாரங்கள் சம்பந்தப்பட்ட செய்திகளையும் கொழும்பிலுள்ள டச்சு அரசாங்கத்தினருக்கும் டச்சுக்காரருக்கும் இடையே நடந்த ஒப்பந்தம் முதலியவைகளைப் பற்றியும் ஆகஸ்டு 13ஆம் தேதி உங்கள் எஜமானருக்கும் போர்டுக்கும் எழுதிய என்னுடைய கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த விவரங்களடங்கிய மூலங்கள் கட்டபொம்மன் கோட்டையிலிருந்து அகப்பட்டன.

கர்னல் புல்லர்ட்டன் கூறும் விவரங்கள்

25வது அணியிலுள்ள 5 கம்பெனிப் பட்டாளங்களைக் காப்டன் ஜேகப்சு (Jacobs)வுடன் அந்த இடத்தைக் காவல் காக்கும்படி நிறுத்திவிட்டு நான் பாளையங்கோட்டைக்குச் சென்றேன். அங்குள்ள கோட்டையின் வலிமையைச் சோதனையிட்டு அறிந்து கொண்டு அங்கிருந்து சங்கர நயினார் கோயில் வழியாகச் சிவகிரிக்குச் சென்றேன்.