பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

253 கால்டுவெல்


-வேலி பாளையக்காரர்களின் சூழ்நிலையை நன்கு விளக்கி, நவாபின் பிரதிநிதிகள் அவர்களிடம் நயமின்றி நடந்துகொண்டதையும், அதற்கு மாறாக அவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ள அவர்கள் மேற்கொண்ட புதிய முறையின் தன்மைகளைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தனர். அவர்கள் கொடுத்திருந்த விவரம் வருமாறு: 'பாளையக்காரர்கள் எண்ணிக்கை முப்பத்திரண்டுதான். அவர்களுக்கு 30,000 பேர்களடங்கிய போர்ப்படை இருந்தது. அவர்கள் வேல்களையும் சிறு துப்பாக்கிகளையும் போர் ஆயுதங்களாகப் பயன்படுத்தினர். வலிமைமிக்க கோட்டைகளைப் பெற்றிருந்தனர். இவற்றைக் கைப்பற்றுவதே நவாபின் படையினருக்கு மிகக் கடினமான செயலாக இருந்தது. அப்படி அல்லல்பட்டு அவர்கள் வெற்றி பெறினும், படையினர் காடுகளுக்குள் தப்பி ஓடுவதற்கு மிக எளிதாக இருந்தது. நவாபு வலிமையடைந்திருந்தபோது, பாளையக்காரர்களின் பயம் அவர்களை எவ்வளவு பணியத்துண்டியதோ அதற்கேற்றாற்போல் அதிக திறைப் பணத்தை அவர்கள்மேல் சுமத்தினான். ஆனால் அவன் வலிமையற்றபோது அவர்களே கொடுத்த திறைக் காணிக்கைகளைப் பெற்றுக் கொண்டு நிறைவு எய்தித் தன் கட்டளைப்படி வலுவில் திறைப் பணத்தைப் பெறுவதற்கு ஏதுவான சூழலை எதிர் நோக்கி யிருந்தான்.

திரு.இர்வின் 1783 இல் கணக்கிட்டபடி அதற்கு முந்திய 18ஆண்டுகளில் பாளையக்காரர்களிடமிருந்து ஒரு இலட்சம் சக்கரங்களுக்குமேல் ஆண்டுதோறும் திறைப் பணம் வசூலாக வேண்டியிருந்தது. ஆனால் சராசரி ஏறக்குறைய 40,000 சக்கரங்களே ஆண்டுதோறும் கஜானாவுக்கு வந்து சேர்ந்தது. இந்தச் சிறு இலாபத்துடன் கொள்ளைகளால் இழந்தவற்றையும் இராணுவப் படையெடுப்பால் செலவழிக்கப்பட்டதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நவாபு தனது நிர்வாகத்தில் பல இலட்சக் கணக்கான பகோடாக்களை இழந்திருக்க வேண்டுமெனத் தோன்று கிறது. இந்த முறையினால் ஏற்படும் தொல்லை இது ஒன்றுமட்டுமல்ல; அமைதிக் காலத்தில் சிறந்த மக்களாயும், போர்க்காலத்தில் உற்ற ஒத்துழைப்பாளர்களாகவும் இருக்க வேண்டும் என்ற இருதிற நம்பிக்கை மக்களிடையே ஏற்படுவதற்குப் பதிலாக அடிக்கடி சண்டைகளும், நிலையான நம்பிக்கையின்மையும் அவர்களிடையே குடிகொண்டிருந்தன. இதன் பயனாய் 1780 இல் ஐதர் அலி கர்நாடகத்தை முற்று கையிட்டபோது அவர்கள் அச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களுடைய திறைப் பணத்தைச் செலுத்தாது, நாட்டைச் சூறையாடிக் கொடுமையும் அநீதியும் நிறைந்த பல செயல்களில் ஈடுபட்டனர். இதைக் கண்டு வெகுண்ட கம்பெனி, போர் நடந்து கொண்டிருந்த போதே, ஒரு பெரிய படையை இவர்களுக்கு எதிராக அனுப்ப வேண்டிய