பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

261 கால்டுவெல்


விஷயத்தில் கர்னல் மாக்ஸ்வெல் காட்டிய கொள்கையை டோரின் ஏற்க மறுத்துவிட்டார். கர்னல் மாக்ஸ்வெல், டோரின் தன்னுடைய அதி காரத்தில் தலையிடுவதாக அரசாங்கத்தினிடம் முறையிட்டார். மேலும் டோரினுடைய இரு மொழியாளர் (துபாஷ்) அல்லது தனிமொழி பெயர்ப்பாளர் பாளையக்காரர்களுடன் ஒளிவு (இரகசியத் தொடர்பு) கொண்டிருப்பதாயும் அவனிடம் டோரின் மிக்க நம்பிக்கை வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கத்தினருக்கு அனுப்பப்பட்ட குறிப்பொன்றில் தனது இரு மொழியாளனை (துபாஷை) உடனே விலக்கிவிடும்படி டோரினுக்கு உத்தரவிடப்பட்டது. பாளையக்காரர்களின் விவகாரங்களில் கர்னல் மாக்ஸ்வெல்லுக்கு முழு அதிகாரமும் கொடுக்கப்பட்டது. அதன் பின் டோரின் 'ராஜினாமா' செய்தார். அவருடைய இரு மொழியாளர் (துபாஷ்) காவலுடன் மதராசுக்கு அனுப்பப்பட்டார். இச்சமயத்தில் டோரினுடைய உதவியாளராயிருந்தவர் தாமஸ் ஸ்காட் ஜாக்சன். (Thomas Scott Jackson) டோரினுடைய 'பதவி விலக்கம்' ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவருக்குப் பின் ஜேம்ஸ் லாண்டன் (James Landon) அந்த வேலைக்கு நியமிக்கப்பட்டார். அவர் 1792 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி திரு. லாண்டனிடம் அதிகாரங்களை ஒப்படைத்தார். திரு லாண்டன் மாதம் 250 பகோடாக்களும், 1½ சதவீதம் தள்ளுபடித் தொகை வருவாயையும் ஆண்டு இறுதியில் பெற ஏற்பாடாயிற்று. திருநெல்வேலிலுள்ள மதுரை அணைக்கட்டைச் சீர் திருத்தி அமைத்தது பற்றி திரு. டோரின் பெயர் சிறப்பாக நினைவுகூரப்பட்டு வருகிறது. பழமையான கல்வெட்டொன்றில் அவருடைய பெயரும் 1792 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் படையெடுப்புகளிலெல்லாம் கர்னல் மாக்ஸ்வெல்லின் காரியதரிசி அல்லது உதவியாளராக இருந்தவர் காப்டன் பானர்மன் (Bannerman). இவரே இது போன்ற, ஆனால் மிகச் சிறப்பு வாய்ந்த 1799 ஆம் ஆண்டு படையெடுப்பில் தலைவனாக இருந்தவர்.

தென்பாண்டித் திருநாடு

1793: திரு. பால்மன் (Balmain), திரு. லாண்டனின் உதவியாளர். லாண்டனின் வேண்டுகோளின்படி மாதம் 50 பகோடாக்கள் கூடுதலாக அவனுடைய சம்பளத்துடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டது.

நவாபின் நிர்வாகியால் அவனுடைய மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட தாசில்தாரை உடுகண்டு (அநேகமாய் ஓர்க்காடு) (ஆங்கில உச்சரிப்பால் கால்டுவெல்லுக்கே ஐயம் - ந.ச.) பாளையக்காரர் கொலை செய்ததாக திரு. லாண்டன் கூறுகின்றார்.