பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 266


தத்திலுள்ள கீழ்க்காணும் சில பத்திகள் இதுபற்றி மேலும் சில உண்மை களைத் தெரிவிக்கின்றது. மேலும் அவர்கள் ஊத்துமலைப் பாளையக்காரனின் குழப்பங்களையும் குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

மாப்பிள்ளை வன்னியன் என்பவனையும் சங்கரலிங்கம் பிள்ளையையும் பிடிப்பதில் படைப் பகுதியின் முயற்சிகள் வெற்றி பெறுமாயின் அவர்களை ஒரு காவலின் கீழ் மாகாணத்திற்கு அனுப்பிவைக்கும் அதிகாரத்தைப் பவுனேக்கு அளிக்குமாறு நாங்கள் பரிந்துரை செய்கிறோம். மேன்மை தங்கிய தாங்கள் அதற்குப் பதிலாக-இந்த யோசனையையும், குறிப்பிட்டிருந்த சூழ்நிலையில் கலெக்டரின் நடவடிக்கைகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டீர்கள். அடுத்து, பவுனேயிடமிருந்து வந்த செய்தியிலிருந்து சங்கரலிங்கம்பிள்ளை ஊத்து மலைப்பாளையத்தில் அடைக்கலம் புகுந்திருப்பதாகத் தெரிந்து, காப்டன் டெய்டன் (Captain Dighton) சிப்பாய்ப் படையைச் சில சிவகிரி வேலைக்காரர்களுடன் அவனைப் பிடித்துவர அனுப்பினான். அவர்கள் அவனைப் பிடித்து கலெக்டரின் கச்சேரியை நோக்கி அழைத்து வரும்பொழுது ஊத்துமலை வேலைக்காரர்கள் சுமார் 300 பேர் ஒன்று கூடித் திரண்டு வந்து அவனை விடுவித்துச் சென்றுவிட்டனர் என்று அறிந்தோம். மேலும் வந்த செய்தியின்படி சங்கரலிங்கம்பிள்ளையைத் தங்களிடம் ஒப்புவிக்குமாறு ஊத்துமலைப் பாளையக்காரனிடம் கேட்டபோது தயங்கக்கூடிய அளவு கடமையுணர்ச்சி அற்றவனாயிராமல் கம்பெனியிடம் அவன் காட்ட வேண்டிய கடமையை உணர்ந்து அவனை ஒப்படைத்த செய்தி எங்களுக்கு மனநிறைவை அளித்தது. ஆனால் கம்பெனிச் சிப்பாய்களை அவன் ஆட்கள் தாக்கியது அவன் கட்டளையின் மேல் நடந்ததா? அல்லது அவன் உடன்பாட்டின் மேல் நடந்ததா? எதுவாயினும் அவன் தன்னுடைய உடன்படிக்கையை பயங்கரமாக மீறியதாகக் கருதவேண்டும். அதற்குக் காரணமானவர்களை எப்படியாகிலும் கண்டு பிடித்தல் பவுனேக்கு ஏற்றதாகுமென்று தெரிவித்துள்ளோம். எனவே நாங்கள் இதில் தொடர்பு கொண்ட எல்லோரையும் அவருடைய கச்சேரிக்கு வரும்படி கட்டளையிடும்படி அனுப்பியுள்ளோம். அத்தகைய சோதனைகளுக்குப் பிறகு அவன் தீர்ப்புக்குத் தேவையென்று தோன்றுகிறபடி அவர்களுக்கு அளிக்கப்படவேண்டிய தண்டனை பற்றிய கருத்துகளையும் எங்கள் ஆய்வுக்கு அனுப்பும்படித் தெரிவிக்கிறோம்.

இந்த ஆண்டு இறுதியில் பவுனேக்குப் பின் திரு. ஜாக்சன் கலெக்டரானர். அவனுடைய காலத்திய முக்கிய நிகழ்ச்சிகள் பானர்மன்-பாளையக்காரர் போரைப் பற்றிய குறிப்பில் இடம்பெறுகிறது. பானர்மன் பாளையக்காரர்கள் போர் அடுத்தப் பகுதியில் காணப்படும்.