பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இயல் - 7

பானர்மன் - பாளையக்காரர் போர்

1781-1801 ஆம் ஆண்டுகட்கு இடையே இருந்த
அரசியல் நிலை பற்றிய குறிப்பு

பல பாளையக்காரர் போர்களுக்கான காரணங்களைப் பற்றியும் இறுதியாக நாட்டைக் கம்பெனி ஆட்சிக்கு ஒப்படைத்ததைப் பற்றிய தெளிவான விவரங்களையும் அறிவதற்கு அரசியல் நிலைகளைப் பற்றிய சுருக்கமான விளக்கங்களை வாசகர்களுக்கு அளித்தல் தேவையாகும். அதாவது 1781 முதல் 1801 க்கு இடைப்பட்ட காலத்தில் ஆர்க்காட்டு நவாபுக்கும் கிழக்கிந்திய கம்பெனி அரசாங்கத்திற்கும் இடையே நிலவியிருந்த உறவுபற்றிய விவரம் அறிய வேண்டியது இன்றியமையாதது. அவ்வாறு செய்யுங்கால் ஏற்கனவே ஆண்டுகள் தலைப்பிட்டுக் கொடுக்கப்பட்ட பல நிகழ்ச்சிகளின் குறிப்புகளைத் திரும்பவும் கூறும் படி நேரிடலாம். திருநெல்வேலியில் ஆங்கில அரசாங்கத் தொடர்பு 1789இல் தொடங்கியது. எனினும் 1799 இல் திரு. லூஷிங்டனின் கலெக்டர் பதவிக்காலம் வரை நாட்டில் நிலவியிருந்த ஒழுங்கீனங்களை விலக்கவுமில்லை; தணிக்கவுமில்லை. ஐதர்அலி, திப்புசுல்தான் போன்ற வலிமைமிக்க பகைவர்களால் மாகாணத்திற்குத் தீங்கு ஏற்படுமென பயமுறுத்தப்பட்டதனால் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கேயும் மைசூருக்கு அருகேயும் துருப்புகளை நிறுத்திவைக்க வேண்டிய தேவை ஏற்பட்டமையே அரசாங்கத்தின் இச்செயலின்மைக்கு ஒரு காரணமாகும். ஸ்ரீரங்கப்பட்டணம் கைப்பற்றப்பட்டு 1799 மே 4 ஆம் தேதி திப்பு இறந்த பிறகு இந்த இடையூறுக்கும் ஒரு முடிவு ஏற்பட்டது.

திருநெல்வேலி பாளையக்காரர்களைப் பணிய வைக்கத் தக்க தீவிர நடவடிக்கைகளை ஒத்திப்போட்டமைக்கு முக்கிய காரணம் இந்தக் காலம் முழுமையும் ஆங்கில அரசாங்கத்திற்கும் நவாபுக்குமிடையே இருந்த நிறைவில்லாத உறவுகளிலிருந்துதான் காண வேண்டும். 1781 டிசம்பர் 2 ஆம் தேதி இருதிறத்தினருக்கும் ஒரு