பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 20

பிழையுடையதாய் இருக்கிறது. மேலும் பேராசிரியர் வில்சன் அருச்சுனனுடைய மனைவி பாண்டியன் மகளல்லள் என்றும் மணிபுரியின் பாம்பரசனின் மகள் என்றும் குறிப்பிட்டுள்ளதெனக் கூறுகிறார். (அருச்சுனன் பாண்டியன் மகளையே மணந்தான் என்பதை ஐயுறுவாரை மறுத்து உயர்திரு. மு. இராகவையங்கார் தனிக்கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். பார்க்க ஆராய்ச்சித் தொகுதி, பக். 70-78 - ந.ச.)

பழைமையான பாண்டிய விருதுகள்

பாண்டவ உடன்பிறப்பாளர்களுடன் உறவு ஏற்படுத்திக் கொள்வதற்கு முன்பே பாண்டிய மரபு இருந்தமை கூறப்படுகிறது. ஏனெனில், பாண்டியனுக்குப் பதிலாக மாறன் என்பது அவ்வரசவழித் தலைவனின் மிகப் பழைமையான பெயராய் இருந்திருக்க வேண்டுமென்பது தெரிகிறது. பழைய கல்வெட்டுகளில் பாண்டிய அரசர்களின் விருதுகளைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது மாறன் என்ற சொல்லே அவ்வரிசைப் பட்டியலின் தொடக்கமாய் இருக்கிறது என்பதை நான் கண்டுள்ளேன். மேலும், கொற்கையில் ஒரு பகுதி பாண்டிய மங்கலம் என்று வழங்கப்படாமல் மாறமங்கலம், 'மாறனின் வளமைபொருந்திய சொத்து' என்றும் வழங்கப்படுகிறது என்பதையும் நான் கண்டறிந்தேன். இப்பெயர்கள் மாறன் - கொற்கை, பாண்டியன் - மதுரை என்று இணைந்தே இருப்பது தெரிகிறது. 'கொற்கை ஆளி, கொற்கையை ஆண்டவன்' என்ற விருது பாண்டிய வமிசத்தைத் தோற்றுவித்தவனாகக் கருதப்படும் குலசேகரனுக்கு வெற்றிவேற்கை ஆசிரியனாகிய மற்றொரு பாண்டியனால் வழங்கப்பட்டுள்ளது.

பாண்டியர்களுடன் பண்டைச் சிங்களவர்களின் உறவு

தாமிரபரணி என வழங்கப்பட்ட இலங்கையின் (சிலோன்) அரசன் திருமணம் மூலம் பாண்டியர்களுடன் உறவு ஏற்படுத்திக் கொள்வதற்காகத் தூதுவர்களை அனுப்பினான் என்று சொல்லப்படுவதால் தாமிரபரணியின் கூடுதுறையிலுள்ள கொற்கை கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே பாண்டியர்களுடைய இருக்கையாய் இருந்திருக்க வேண்டும். அதேகாலத்தில் தென் மதுரையில் பாண்டியர்கள் வசித்து வந்தார்களென்றும் அங்கேயே அரசாட்சி செய்துவந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. மகாவமிசம் என்னும் நூல் இயற்றப்பட்ட காலத்தில் கொற்கை என்ற இடமே மறைந்து விட்டது. எனவே, இது காலக்கணித இடர்ப்பாடாகவே இருக்க வேண்டும். அப்பொழுது ஆண்ட பாண்டிய மன்னன் யார் என்பது குறிப்பிடப்படவில்லை. பாலி மொழியில் வரையப்பட்டுள்ள