பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21 கால்டுவெல்

மகாவமிசத்தில் குறிப்பிடப்படும் அவன் பெயர் இந்தியாவில் வழங்கப்பட்ட பெயரினின்றும் சிறிது வேறுபட்டதாயிருக்கிறது. அவன் சிலபோது ‘பாண்டவோ’ (Pandavo) என்றும் வழங்கப்பட்டான். ‘பாண்டவோ’ என்பது பாண்டவர்களையே குறிப்பது உண்மை. பாண்டு என்பது பாண்டவர்களின் தந்தையாரைக் குறிக்கும் பெயர்; கதையின் படி விசயன் முதன் முதலில் ஒரு யக்ஷிணியை (இயக்கர்களின் அரசி) மணந்து கொண்டான். ஆனால், பிறகு மானிட மனைவி வேண்டுமென்று நாட்டிற்குள் தன் ஏவலரை விட்டுப் பெண்தேடச் செய்தான், மானிட மனைவியை மணந்து கொள்வதால் மண்ணுலகில் தனக்கு ஒரு நாடும் அரசபதவியும் கிடைக்கும் என நம்பினான். அவன் விரும்பியது போலப் பாண்டிய அரசன் தன் மகளை அவனுக்குத் திருமணம் முடித்துவைத்தான். அப்பெண்ணுடன் இலங்கைக்குச் சென்று பெண் சுற்றத்தை விசயனின் நண்பர்களுக்கு மணம் முடித்து வைத்தான். கதையின்படி விசயனுக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே, தன்னுடைய தம்பி மகனைத் தனக்குப் பின் வாரிசாக நியமித்தான். இவ்விளவரசன் பாலிமொழியில் பாண்டு வமிசதேவன் என்று வழங்கப்பட்டான். இதிலிருந்து அவன் பெயர் பாண்டு வமிசதேவன் என்பதை அறியலாம். அவன் வடவிந்தியாவிலுள்ள நகரமாகிய சிம்மபுரத்திலிருந்து, விசயன் வந்தது போலவே வந்தான் என்று சொல்லப்பட்டபோதிலும், அவன் உண்மையில் பாண்டிய வமிசத்து இளவரசனே என்று சொல்வதில், பெரும்பிழை இல்லை. இவ்வமிசத்தின் நான்காம் இளவரன் ‘பாண்டுகபாயா’ எனப்படுவதால், இப்பெயரும் பாண்டியர்களுடைய தொடர்புடையதாயிருப்பதற்கு எடுத்துக் காட்டாயுள்ளது. மற்றும் பாண்டியப் பெயர்களையுடைய (திருநெல்வேலி இளவரசர்கள்) இருவர் பெயரால் இலங்கையில் புகழ் பெற்றிருக்கும் மூன்று நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், மதுரைக் கடற்கரையை அல்லது திருநெல்வேலி மக்களிடமிருந்து பழைய சிங்களவர்கள் நீர்ப்பாசனத்திற்காக நீர்த்தேக்கங்களைக் கட்டும் கலையைக் கற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நாம் முடிவு செய்யலாமல்லவா? விசயன் தன் பாண்டிய மாமனாருக்கு ஆண்டுக்கு இரு இலட்ச ரூபாய் பெறுமானமுள்ள சங்குகள், முத்துகள் முதலியவைகளைக் கொடுத்தான் என்பதும் சொல்லப்படுகிறது. இதனால், பாண்டியர்களுக்கு இலங்கை மக்கள் கப்பம் செலுத்திவந்தார்கள் என்று பொருள் கொள்ளலாமா? ஆனால், இச்செய்திகளினின்றும் ஒன்று மட்டும் உறுதியாகிறது. அதன்படி இலங்கையில் ஆரிய நாகரிகம் கி.மு.500க்குப் பின் நுழைந்திருத்தல் இயலாது. அக்காலத்திற்கு முன்பே விசயனும்