பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23 கால்டுவெல்


காரணம் அந்நாட்டை ஆண்ட அரசர்களின் பெயரே என்று அவர் கருதியது சரியே. மேலும், எவ்வளவு தவறாக இருப்பினும் கிருஷ்ணன் கதைகளோடு பாண்டியர் பெயர்களையும் அவர் தொடர்புபடுத்தியது ஓரளவிற்குச் சரிதான். அந்நாட்டைப் பற்றி மெகஸ்தனிஸ் என்பவர் கூறியுள்ள ஒவ்வொரு செய்தியும் - முக்கியமாக, முத்துகள் அங்கே கிடைத்தன என்ற செய்தி - அந்நாட்டைப் பாண்டி நாடென அறியப் பெரிதும் உதவுகின்றது. சிறப்பாக முத்துக் குளித்தல் நடைபெற்ற முக்கிய இடங்கள் இருந்த கடற்கரைப் பகுதியாகிய திருநெல்வேலி அல்லது பாண்டி நாட்டின் தென்பகுதியை அடையாளம் காண உதவுகிறது.

இது பற்றிப் பொய்யும் மெய்யும் கலந்த செய்திகளை உண்மையென நம்பிக் கூறியுள்ள மெகஸ்தனிஸின் மொழிகளைப் பிளினி (Pliny) என்பார் மேற்கோளாக எடுத்துக் காட்டியுள்ளார். அதை இங்கு எடுத்துக் கூறுவது இன்பந் தருவதாகும்.

“அவன் (இந்திய ஹெர்குலிஸ்) தான் தேவன் என்ற முறையில் மனைவியர் பலரை மணந்துக் கொண்டான். அதனால் அவனுக்கு கணக்கற்ற மைந்தர்கள் இந்தியாவில் ஏற்பட்டார்கள். எனினும், பெண் ஒருத்தியே பிறந்தாள். அந்தப் பெண்ணின் பெயர் பாண்டைய (Pandaia) என்பது. அவள் பிறந்த இடத்திற்கும் ஹெர்குலிஸ் அவளுக்கு வழங்கிய அரசிற்கும் அவள் பெயரே இடப்பட்டது. மேலும், அவள் 500 யானைகள், 4000 குதிரை வீரர்கள், 1,30,000 காவலர்கள் அடங்கிய படைகளைத் தன் தந்தையிடமிருந்து பெற்றாள்.”

இந்திய எழுத்தாளர் சிலர் மேலும் ஹெர்குலிஸ் பற்றிப் பின்வருமாறு கூறுவர்.

“ஹெர்குலிஸ் உலகத்தைச் சுற்றிவந்தான். அப்பொழுது நிலத்திலும் நீரிலும் பயணம் செய்து அங்கெல்லாம் நிறைந்திருந்த தீய பூதங்களையும் தாக்கிவென்று, சமுத்திரத்திலிருந்து பெண்டிர் அணிந்து கொள்ளற்குரிய ஓர் அணியையும் கண்டெடுத்தான். இன்றும் இந்திய வணிகர்கள் சந்தைக்குத் தங்கள் பொருள்களைக் கொண்டு வரும்போது அதை ஆர்வத்துடன் வாங்கிச் செல்வார்கள். கிரேக்க நாட்டுச் செல்வர்கள் பண்டைக் காலந்தொட்டே அதை அணிந்து வந்தார்கள். இன்றும் உரோமை நாட்டுச் செல்வர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதை வாங்குகிறார்கள். அந்தப் பொருள் கடல்முத்தே. அது இந்தியாவில் மரகதம் என்று வழங்கப்படும். ஆனால், ஹெர்குலிஸ் அதன் அழகில் ஈடுபட்டு, அதை அணிந்து கொள்ளும் அணியெனக் கருதி எல்லாக்