பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 328


கியமாகத் தென் கோணப் பகுதியை இடித்தனர். மதியத்திற்குள் முற்று கையிட்ட படையினர் முன்னேறத் தயாராயிருந்தனர். ஆனால் எங்களுடைய பழைய தளபதி, கர்னல் அக்னியூவை வேறொரு பழைய நண்பனின் உதவியுடன் தனிமையில் சந்தித்தான். அவனுடைய முடிவு சிறந்ததாகத் தோன்றியபோதிலும், அதற்கு மாறாக மறுநாள் வரை தாக்குதலைக் காலந்தாழ்த்தும்படி வேண்டிக் கொண்டான். எனவே, எதிரிகள் பிளவைச் சரிசெய்துவிடாதபடி இரவு முழுவதும் துப்பாக்கித் தாக்குதல் நடைபெற்றது. மறுநாள் காலை பாதுகாப்பு அமைப்புகளைத் தவிடுபொடியாக்கத் துப்பாக்கிள் திருப்பப்பட்டன. மதியம் 1 மணிக்குப் பிளவுபட்ட புற அரண் முழுவதும் துண்டிக்கப்பட்டது. கோபுரத் துப்பாக்கிகளைக் (Tower guns) கோட்டையின் பாதி வழிவரை செலுத்திய பின், முற்றுகையிட்ட படையினருக்கு முன்னேறும்படி கட்டளையிடப்பட்டது.

அந்நிலையில் முற்றுகையிடும் படையினர் வலிமையையும் அவர்களுக்கு உடனடியாகத் துணைசெய்யக் காத்திருந்த முழுப் படையின் வலிமையையும் அறிந்த, கோட்டையைப் பாதுகாத்த வீரர்கள் தங்கள் கடமையினின்றும் பின் வாங்கினர். எனினும் அவர்கள் எங்களுடைய திறமை வாய்ந்த வீரர்களைப் புது வலிமையுடன் வரவேற்றனர். (ஓ! - ந.ச.) பிளவு பலத்த காவலுடன் இருந்தமையால் சில மணித்துளிகளில் அரணைக் கடந்துவிட்டபோதிலும் ஏறக்குறைய அரை மணி நேரத்திற்குப்பின் தான் எங்கள் வீரருள் ஒருவன் உச்சியை அடைந்து நிற்க முடிந்தது. அப்போது எதிரிகள் இடிந்த கொத்தளத்தின் பக்கவாட்டிலிருந்து கொண்டு எங்கள் வீரர்கள் மீது சுட்டதன்றி மற்றவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு அரணுக்குள்ளிருந்த இடத்திலேயே தாக்கினர். இந்த நிலையில் சற்றேறக்குறைய 15 மணித்துளிகள் கைகலந்த பின்னர் பிளவின் அருகே இருந்த எதிரிகள் யாவரும் எறிகுண்டுகளாலும், அவர்கள் மீது வீசப்பட்ட குண்டுகளாலும் கொல்லப்பட்டனர். எங்கள் துப்பாக்கித் தொண்டர்கள் பிளவின்மீது ஏறிச் செல்வதில் வெற்றி கண்டனர். அதற்குப்பின் பகைவர் எதிர்ப்பு பயனளிக்கவில்லை என்றாலும் ஈட்டி வீரர்கள் படை ஒன்று எங்கள் துப்பாக்கித் தொண்டர் படைகளைத் தாக்கி அவர்களுள் மூவரைக் கொன்றது.

திரு. ஹக்சு கூறுகிறார்:

பிளவின் உச்சியை அடைந்தவுடனே அங்கிருந்து இறங்குவது எந்த விதத்திலும் எளிதாயில்லை. இங்கு காவற் படையினர் பிளவைச் சுற்றிலும் அரணை அல்லது பூமியை ஆழமாகத் தோண்டி வைத்திருந்தனர்.