பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 332


(Captain M Donnel) தலைமையில், எதிரிகளால் கைவிடப்பட்ட பத்து மைல் தூரத்திலிருந்த தூத்துக்குடி கோட்டை அரனைக் காவல் செய்ய அனுப்பப்பட்டது.

ஊமைத்துரையின் நினைவுகள் ஜெனரல் வெல்ஷ் கூறுகிறார்:

நான் ஏற்கனவே இதைப்பற்றிக் குறிப்பிட்டிருந்த போதிலும் நானே அறிந்த, பொதுத் தன்மைக்கு மாறான மனிதத்தன்மை மிகுந்திருந்தவனாகிய ஒருவனைப் பற்றிய நினைவாகச் சில வார்த்தைகள் கூறாமல் இப்பேரச்சம் பொருந்திய நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புகளை முடிக்க என்னால் இயலவில்லை. (உம்! - ந.ச.) அவன் கட்டபொம்ம நாயக்கனுக்கு நெருங்கின உறவினன். அவன் ஊமை, செவிடும் கூட ஆங்கிலேயரால் அவன் ஊமையன், ஊமைத் தம்பி என்றும், முஸ்லிம் களால் மூக்கா என்றும், இந்துக்களால் ஊமை என்றும் அழைக்கப்பட்டான். இப்பெயர்கள் எல்லாம் ஒரு பொருளை உணர்த்துபவை. அவன் உயரமானவன், ஒல்லியான உடம்பு உடையவன்; நலிந்த தோற்றங் கொண்டவன். ஆயினும் குழப்ப காலங்களில் முன் எச்சரிக்கையுடனும் மிக்க மன உறுதியுடனும் இருக்கும் வல்லமை பெற்றவன். (உம்! -ந.ச.) பிறருக்குப் பெருங்குறையாய் இடையூறாயமையக் கூடிய ஊமைத் தன்மையாகிய குறைபாடே அறியாமையும் மூடபக்தியும் நிறைந்த மக்களின் மனத்தில் அவனை வலிமைமிக்கத் துணைப்படைத் தலைவனாக உயர்த்தியது. (வெள்ளைத்துரையே! ஊமைத்துரையின் உள்ளம் ஊமையும் செவிடும் இல்லையே! - நச.) ஊமை போற்றப்பட்டான். அவனுடைய சிறு அசைவுகள் கூட தேவகட்டளையாக இருந்தது. (பின்? - ந.ச.) ஒவ்வொருவரும் அவன் இட்ட கட்டளையைச் செய்து முடிக்கப் பறந்தனர். அவன் தலைமை வகிக்காத கூட்டம் இல்லை. அவன் பொறுப்பேற்காத எந்தப்படையும் துணிவுநிரம்பிய செயல்களில் ஈடுபடுவதில்லை. அவன் ஆங்கிலேயரைக் குறிப்பிடும் வழக்கம் மிக்க எளிமையானது. சிறிது வைக்கோல் துண்டுகளைச் சேர்த்துத் தனது இடது உள்ளங்கையில் ஒழுங்குபடுத்திவைத்து அதன்மூலம் ஆங்கிலேயர் படையைக் குறிப்பிடுவான். பிறகு மற்ற செய்கைகளினால் நேரம் முதலியவைகளைக் குறித்துவிட்டு, அவனுடைய மற்றொரு கையைக் குறுக்கே இழுத்து, அவனுடைய வாயினால் விஃறென்ற ஒலியுடன் அவற்றை வீசி எறிந்துவிடுவான். அது தாக்குதலை உணர்த்தும் சுட்டுக் குறியாகும் (வெட்கமில்லை? - ந.ச) பொதுவாக அவனே நமது அழிவிற்கான முதல் நிலையான திட்டங்களை வகுப்பவன். எத்தகைய ஒழுங்கற்ற பேராண்மையும் விளைவிக்கக் கூடிய பயன்களை, அவன் எங்கெல்லாம் தோன்றுகிறானோ அங்கெல்லாம் உறுதியாக அடை