பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

333 கால்டுவெல்


வான். ஆனால், இறுதியில் தூக்குமேடை ஏறும் படியான விதி அவனுக்கு ஏற்பட்டது. (அது கிடக்கட்டும்! - ந.ச.) அதற்கு முந்திய ஒவ்வொரு சூழ்நிலையிலும் வியப்பூட்டும் வகையில் அவன் தப்பித்துக் கொண்டிருந்தான்.

மே 24 ஆம் தேதி கோட்டை அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டவுடன் பகைவனுடைய முழுப்படையும் எங்கள் குதிரைப் படையைத் தொடர்ந்ததால் அது பின்வாங்கிச்சென்றது. ஆனால் ஊமை பாஞ்சாலங்குறிச்சிக்கு ஏறக்குறைய மூன்று மைல் தூரத்தில் உள்ள சிறு கிராமத்தருகில் உடல் முழுவதும் காயங்களுடன் விழுந்து விட்டான். அவர்களை விரட்டிச் சென்ற எங்கள் படை திரும்பி வந்தவுடன், எட்டயபுர வீரர்களை நோக்கி, இரவு முழுவதும் அவர்கள் உயிரை ஒரு பொருட்டாக எண்ணாமல் பகைவரைத் தொடர்ந்து செல்லும்படி படைத்தலைவன் அக்கினியூ கட்டளையிட்டான். எங்களது படைப் பிரிவினர் முடிவில் மகிழ்ச்சியுடன் அன்றைய முன் இரவில் வெளியே புறப்பட்டனர். அப்பொழுது கிராமத்தைச் சேர்ந்த சில பெண்கள் குற்றுயிராய்க் கிடக்கும் வீரர்களுக்குத் தக்க உதவி செய்வதன் பொருட்டு போர் நடந்த இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். கொலை செய்யப்பட்ட உடல் குவியல்களினிடையில் அந்தப் பெண்களில் ஒருத்தியின் மகன் குற்றுயிராய்க் கிடப்பதைக் கண்டனர். அவனைக் கண்டு அழுது அரற்றியபின் அவனைத் தூக்க முயன்றனர். ஆனால் அவனோ தன்னிடத்தில் எஞ்சியிருந்த உயிராற்றலை எல்லாம் ஒன்று கூட்டிப் பின் காணுமாறு கூறினான்: "ஆ! அம்மா! என்னைச் சாகவிடு; ஆனால் என் அருகில் அவர்-என் சுவாமி. காயம்பட்டுக் கிடக்கிறார். அவர் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்," சுவாமி என்ற சொல்லுக்குத் தெய்வம் என்று பொருள். அவன் பயன்படுத்திய அச்சொல் அவனிடத்தில் அவர்கள் கொண்டிருந்த பக்தியைப் பற்றிய என் எண்ணத்தை வலுப்படுத்தியது. அந்தப் பெண் உடனே மிக்க அச்சத்துடனும், பக்தியுடனும் இறந்து கொண்டிருந்த மகனுடைய விருப்பத்தை நிறைவேற்ற எண்ணி இரத்தத்தில் மூழ்கிப் புரண்டு கொண்டு, குற்றுயிராய் கிடந்த ஊமையை விரைவில் கண்டு பிடித்தாள். விதிவிலக்காயமைந்த அம் மூதாட்டி உடனே ஊமையைத் தூக்கி, வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். அங்கே ஊமையின் காயங்களுக்குக் கட்டுகள் போடுவதில் அவர்கள் முனைந்திருந்தனர். அப்போது எட்டயபுரத்து ஆட்கள் (!-ந.ச.) பின் தொடர்ந்து வருவதை அவர்களுடைய திடும் கூச்சலிலிருந்து அறிந்து கொண்டனர். அத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதில் பெண்களுக்கு இருக்கும் திறமைக்கு ஈடு இணை எதுவுமே இல்லை. (வெட்கமில்லை? - ந.ச.) அவர்கள் அந்த நேரத்திலேயே ஒரு திட்டம் தீட்டினர். அத்