பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 346

 மூவடி தொலைவிற்குட்பட்ட எந்தத் தொலைவிற்கும் உறுதியாக எறிய இயலும். எனினும் பின்பு இதே மனிதனை காட்டு விலங்கை விரட்டுவது போலத் துரத்திச் சென்று; கொடுமைக்குள்ளாக்கிச் சாதாரண வேலையாட்களால் பிடிக்கச் செய்தேன். பின்னர் அவன் முறிந்த தொடையுடன் சிறையில் வாடியதைக் காணும்படியான போர்ச்சூழலுக்கும் நான் இலக்கானேன். இறுதியாக, அவனது வீரத் தன்மையுள்ள உடன் பிறந்தானும்; அவ்வீரத்தில் சிறிதும் குறையாத மகனுடனும், அதிகாரிகள், உறவினர்கள் சூழ தூக்குமேடையில் தொங்கியதையும் நான் காணும்படி நேர்ந்தது.

மருதுக்களின் பழமையான கிராமம் சிவகங்கை அன்று. சிறிய நிலம் என்ற பொருள் கொண்ட சிறுவயல் ஆகும். இந்த இடத்தை வெல்ஷ் ‘ஷெர்வேலி’ என்றும் ஹக்சு ‘சிஹர்வெயில்’ என்றும் குறிப்பிடுகின்றனர். மருதுக்கள் ஆதிக்கத்தின் உச்சநிலையை அடைந்தபோது சிறுவயல் என்ற பெயரைப் புனிதவேலி என்ற ஸ்ரீதேவி என்று மாற்றுவதற்கான முயற்சிகளை எடுத்தனர். படைத்தலைவன் வெல்ஷ் ‘ஷெர்வேலி’ என்று எழுத்தால் எழுதக் காரணம் இதுவேயாகவும் இருக்கலாம். அழகும் பெருமையும் அமையக் கட்டப்பட்ட கிராமமாக அதைப் படைத்தலைவன் வெல்ஷ் விவரிக்கிறார். வழிவழியாக வந்த குடும்ப வாரிசுகளும் போர்க்காலத்திலும் போருக்குப் பின்னும் கூட அங்கேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் மருதப்ப சேர்வைக்காரர்கள் என அழைக்கப்பட்டனர். 1801 இல் நடந்த இறுதிப் போரில் அழகு நிரம்பிய சிறுவயல் ஆங்கிலப்படையினரிடம் அகப்படக் கூடாதென எண்ணி, அந்நகருக்கே தீமூட்டி அழிந்து, திண்மை நிரம்பிய மருதுக்கள் தங்கள் உள்ள உறுதியையும் வீர உணர்வையும் வெளிப்படுத்தினர்.

பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை கைப்பற்றப்பட்டவுடன் அதன் பாளையக்காரர் சிவகங்கைக்குத் தப்பியோடியது ஏன் என்ற கேள்வி எழலாம். அவன் தப்பியோடக்கூடிய ஆதரவான பாளையம் அது ஒன்றே ஆகும். (வாழ்க சிவகங்கை - ந.ச.) தொண்டைமான் அரசர் எப்பொழுதும் ஆங்கிலேயரின் நெருங்கிய நண்பனாக இருந்தான். இரண்டு ஆண்டுகட்கு முன்பு மூத்தவனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்தான். இராமநாதபுர சேதுபதியும் ஆங்கிலேயர் பக்கமிருந்தான். அவனுக்கு மட்டும் ஆங்கிலேயர் உதவி இல்லாமலிருந்திருப்பின் அவனுடைய எல்லைகளை மருதுக்கள் கைப்பற்றி இருப்பர் (அவ்வளவு ஆற்றல்! - ந.ச.) அவனுடைய சொந்த உறவினர்களிலேயே மூலப்பன் என்ற ஒருவன் அவனுக்கு எதிரியாக இருந்தான். மூலப்பனின் திட்டங்கள் எல்லாவற்றிற்கும் ஆங்கிலேயரின் வலிமையும் விழிப்பும் தடையிட்டுக்