பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

347 கால்டுவெல்

 கொண்டிருந்தன. மேலும் தென் மாவட்ட அதிகாரியின் தலைமை இருப்பிடமாக இந்த இராமநாதபுரம் இருந்தது. இராமநாதபுரம் பிரிந்த பின்னரும் கூட இது கலெக்டர் லூவிங்டனுக்குட்பட்டிருந்தது. அவருடைய முதன்மை உதவியாளர், அதன் நிர்வாகத்தைக் கவனித்து வந்தார். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களும் அவனுடைய துணை சூழ்ச்சிக்காரனாகிய நாகலாபுரம் பாளையக்காரனும் இராமநாதபுரம் எல்லைக்குள் அடிக்கடி புகுந்து கொள்ளையடிக்கும் வழக்கம் உடையவராக இருந்தனராதலின் அதுவே இராமநாதபுரம் பாளையக்காரனிடமிருந்து உதவியையோ இரக்கத்தையோ பெற முடியாமல் செய்து விட்டது. அந்தக் கொள்ளையடித்தலின் போது நாகலாபுரம் பாளையக்காரனின் உடன்பிறந்தான் செய்த கொடுமைகளுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவன் தூக்கிலிடப்பட்டான். எனவே கட்டபொம்ம நாயக்கனும் அவனுடைய துணைவர்களும் இராமநாதபுரத்தை அணுகுவதைப் பற்றியே சிந்திக்கமாட்டார்கள். ஆனால் மற்றொரு பக்கம் கட்டபொம்ம நாயக்கன் இடருற்ற நேரத்தில் மருதுக்களின் உதவியை நாடியது இயற்கையே ஆகும். ஏனெனில் மருதுக்களின் துணையாலே அவன் கலகம் செய்யத் தூண்டப்பட்டது முக்கிய காரணமாகும். ஆவணங்களிலிருந்து நாம் அறிவது: சிவகங்கைக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்கும் நடந்த கடிதப் போக்குவரத்தை லூஷிங்டன் நன்கு அறிவான். ஆனால் பாஞ்சாலங்குறிச்சி கைப்பற்றப்படும் வரை மருதுக்களோடு நடந்த கடிதப் போக்குவரத்தில் தான் அறிந்த செய்தியைப் பற்றி எதுவுமே கண்டு கொள்ளாமலிருந்தான். அந்தச் சூழலிலே நடைமுறையில் ஒரு பாளையக்காரர் போரை நடத்தி முடிப்பதே போதுமானது என்று அவன் அறிவுடைமையுடன் முடிவு செய்தான். இந்தச் சூழ்நிலையைப் பற்றி படைத்தலைவன் வெல்ஷோ அல்லது ஹக்சுவோ அறியவில்லை. அன்றியும் மருதுகள் ஏன் ஆங்கில அரசாங்கத்தினரிடம் அவ்வளவு பகைமையையும், அவர்களுடைய எதிரிகளின் நல்வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதில் அவ்வளவு முனைப்பையும் காட்டினார்கள் என்றும் ஒருவருக்கும் தெரியாது.

தென்பாளையக்காரனின் நிர்வாகத்தை லூஷிங்டன் ஏற்றுக் கொண்டவுடன் அவன் மருதுக்களுக்குச் செய்தி அனுப்பினான். அதில் அக்குடும்பத் தலைவனான சசிவர்ணன் வழியில் தோன்றியவன் என்பதைக் காட்டத்தக்க ஆவணங்களையும், அந்த நாட்டின் உரிமையைப் பெறத்தக்க சான்றுகளையும் தெரிவிக்குமாறு அவன் கூறியிருந்தான். தான் அந்தக் குடும்பத்தையோ அல்லது சாதியையோ சேர்ந்தவனல்ல. முற்றும் வேறானவன். முறைகேடான வழியில் நாட்டின் உரிமையைக் கைப்பற்றியவன் என்பதை எல்லாம் அறிந்திருந்த