பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 354

 அத்தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் செய்வதும் அதைவிடக் கடினமா யிருந்தது. (அடே! ந.ச) எனவே இந்த நிலை மிகவும் அலுப்பும் அவலமும் நிறைந்த பெரும் போராக இருந்தது. எங்களுக்கு நாட்டின் ஒரு கோடியிலிருந்து வரவேண்டிய உணவுசேமிப்புகளும், வேலையாட்கள் கூட்டமும் வந்து சேர்வது மிக அரிதாயிருந்தது. இறுதியில் மொத்தப் படையும் சென்று பாதுகாப்பு அளித்து எங்களுக்குத் தேவையானவற்றைக் கொண்டு வர வேண்டியதாயிற்று.

காட்டுவழியில் பாதையமைத்துக் காளையார்கோயிலை அடையச் செய்ய இந்த அருமுயற்சியில் ஒரு முழு மாதமும் கழிந்தது. ஜெனரல் வெல்ஷ் அதைப் பற்றிக் கூறுவதாவது:

“இன்று ஆகஸ்டு 30 ஆம் தேதி, சிறுவயல் பக்கத்திலிருந்து காளையார் கோயிலை அடையச் செய்த முயற்சிகளைக் கைவிடும்படி தீர்மானிக்கப்பட்டது. அதைக்கேட்டவுடன் எங்கள் வீரநண்பர்கள் பலரின் இடுகாடாய் (ஐயோ! - ந.ச.) அமைந்த அந்த இடத்தைவிட்டுச் செல்ல நாங்கள் ஒருமனதாய்ப் பெரு மகிழ்ச்சி எய்தினோம். எதிர்ப் புறத்திலிருந்து கிடைத்த வசதிகளை நோக்க நாங்கள் ஒரு முழு மாதமும் பட்ட உழைப்பை விட்டுவிட்டுப் போவதால் ஏற்படும் மான இழப்பைக் கூட மறந்து விட்டோம். எங்கள் படைவீடு நோயாளிகள் வீடாயிற்று; பலர் வயிற்றுப் போக்காலும் வயிற்றுக் கடுப்பாலும் துன்பப்பட்டனர். இந்த அசுத்தமான நோயினால் அதிகாரிகளும் வீரர்களும் மாண்டனர். திடநலமுடன் மகிழ்வாக இருந்தவர்கள் கூட மனதில் நோய்க் கலக்க முடையவராய் அத்தகைய படை வீட்டில் தங்கியிருக்க விருப்பமின்றி இருந்தனர். அங்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையான அடர்ந்த காடுகளே இருந்தன. விடாமல் மறைந்து தங்கித் தாக்கும் கோழைகளால் நாங்கள் எப்பொழுதும் சூழப்பட்டிருந்தோம். ஒவ்வொரு முறையும் அவர்களைத் தாக்கியபோதிலும் அவர்கள் தப்பித்துக் கொண்டு வெற்றியுடன் எங்களை முழுவதும் சூழ்ந்து கொள்வார்கள். எனவே நாங்கள் ஒரு கடிதத்தையும் வெளியிலிருந்து பெற முடிவதில்லை. வெளியே இருக்கும் ஒருவருக்கு அனுப்பவும் முடிவதில்லை. அருகேயிருந்த பாளையங் கோட்டையிலிருந்தே ஒரு மாதமாக எவ்வித செய்தியும் வராதிருந்தது. அவர்களது இருப்பிடத்தைக் கண்டறிய பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் ஒவ்வொரு முயற்சியும் பயனற்றுப் போயிற்று என்று நான் நம்புகிறேன். எனக்கு நண்பனான பாளையக்காரன் ஒருவனுக்கு முன் பணமாக ஐந்து பகோடாக்களைக் கொடுத்து ஒரு கடிதம் கொடுத்தனுப்பினேன். பாளையக்கார மக்களையும் அந்த நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் (இடுக்கு முடுக்குகளையும்) அறிந்தவனான அவன்,