பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

375 கால்டுவெல்


பகுதியைப் போலக் கூட திருநெல்வேலியிலும் போர்கள் ஒரு வழக்கமான நிலைமையாகக் காட்சி தந்திருக்கும் என்று ஐயமறக் கூறலாம். தொடக்கத்திலிருந்து எண்பது மாதங்களாகத் தொடர்ந்து ஒரு நாளும் அமைதியைக் காணாத ஒரு மாவட்டம், எண்பது வாரங்களுக்குக் கூட அமைதியைக் காணாத மாவட்டம் - இப்பொழுது ஆழ்ந்த இடையீ டில்லாத எண்பதாண்டு அமைதியை அனுபவித்து மகிழ்ந்தது. இதன் விளைவாக அமைதிக் கலைகள் அனைத்தும் வளர்வதற்கும் முழுமைத் தன்மை போன்ற ஒன்றை அடைவதற்கும் போதுமான காலத்தை எடுத்துக் கொண்டது.

இதுவரை ஏற்பட்ட பல நன்மையுள்ள மாற்றங்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க ஒன்றைப் பாளையக்காரர்களிடமே நாம் காண்கிறோம். பாளையக்காரன் ஜமீன்தாராக மாறினான். அவன் பெயரை மாற்றிக் கொண்டது போலவே தன் பண்பையும் மாற்றிக் கொண்டான். ஒரு காலத்தில் கொந்தளிப்பும் முரட்டுத் தன்மையும் நிறைந்த - தங்கள் தீமையும் துணிவும் நிரம்பிய - செயல்களால் கடந்த நூற்றாண்டின் வரலாற்றை நிரப்பிய தலைவர்களின் வழி வந்த - தோன்றல்கள்தான் இன்றைய அமைதி நிரம்பிய நாயக்க மறவ சமீன்தார்கள் என்பதை யாரும் நம்புவது அரிது. (!-ந.ச.) தற்காலத்திய அமைதியே உருவான நாயக்க குடிகள், தங்கள் கலகக்காரத் தலைவனின் வாய்ச் சொல்லுக்கே தங்கள் உயிரைக் கொடுக்கவோ அல்லது தங்கள் தலைவனின் பகைவனை அழிக்கவோ தயங்காத அன்றைய பாளையக்காரர்களின் கைக்கூலிகளின் (?-ந.ச.) வழி வந்தவர் என்பது உண்மையாயிருக்கக் கூடுமா என்றும் ஒருவர் வினவலாம். வறுமையில் வாடிய (ஆங்கிலேயர் அடிமைகளான பின்னுமா? - ந.ச.) மறவர்களிடையே இந்த மாற்றம் முழுமையான பயன்களை உண்டாக்காமலிருந்திருக்கலாம், ஆனால் அவர்களில் பலர் பாதுகாப்பான இடத்தில் தங்கள் பரம்பரைத் தொழிலாகிய சிறந்த காவல்காரர் தொழிலை மேற் கொண்டனர். பலர் சிறப்புடைய பயிர்த் தொழிலைச் செய்தனர். இந்த வகுப்பினரைச் சேர்ந்த பலர் ஒரு காலத்தில் நாட்டின் கொடுங்கோலாட்சியராயிருப்பினும் (முன்னுக்குப் பின் முரண் - ந.ச.) தற்போது மற்ற எந்த வகுப்பினரையும் போலவே சட்டத்திற்கும், நேர்மைக்கும் கட்டுப்பட்டவர்களாகவே இருந்து வருகிறார்கள்.

ஆங்கிலேயர் மாவட்டத்தின் ஆட்சியை ஏற்றதிலிருந்து திருநெல்வேலியில் எல்லாத் துறைகளிலும் வியக்கத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது. நன்மை பயக்கக் கூடிய மாற்றங்கள் பல இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிகமான விளைநிலத்தை மறைத்துக் கொண்டும் பரம்பரை பரம்பரையாக வழிப்பறிக்காரர்களின் உறைவிட