பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 378


அதிகாரியின் கீழ் ஆட்சி நடைபெற வேண்டுமென்ற காரணத்திற்காக அவை எப்பொழுதும் திருநெல்வேலியுடன் இணைந்தே இருந்தன. லூஷிங்டன் மாவட்ட அதிகாரியாக இருந்த காலத்தில் அவருடைய தலைமை உதவியாளர் திரு. பாரிஷ் இராமநாதபுரம் நிகழ்ச்சிகளின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அந்த ஆண்டில் இராமநாதபுரத்தில் நிரந்தர குடியிருப்பு புகுத்தப்பட்டதாலும் அங்கே மாவட்டமுறை நிறுவப்பட்டதாலும், மதுரை, திண்டுக்கல் மாவட்டத்திற்குக் கலெக்டராக நியமிக்கப்பட்ட திரு. கொகரேன் 1803 நவம்பர் 5 ஆம் தேதி நிர்வாகப் பொறுப்பு ஏற்றார். இவ்வாறாக மதுரையுடன் இணைந்த இராமநாதபுரத்திற்கு முதல் மாவட்டத் தலைவராக (கலெக்டராக) பாரிஷ் இருந்தபோது திருநெல்வேலிக்கு மட்டும் முதல் கலெக்டராகக் கொகரேன் இருந்தார். எனினும் அவருடைய அதிகாரம் முழு மாவட்டத்திலும் பரவவில்லை. ஏனெனில் திருநெல்வேலியிலுள்ள பாளையங்கள் அல்லது ஜமீன்தாரிகள் சில ஆண்டுகளுக்கு முன்போலவே இராமநாதபுரத்துடன் தொடர்புள்ளதாக இருந்து வந்தன.

புது அமைப்பில் இராமநாதபுரம் சிறப்பிடம் பெற்றது; வரி வருமானத்துறை கூறுகிறது: சிவகங்கை ஜமீன்தாரி திருநெல்வேலி ஜமீன்தாரிகள், திண்டுக்கல் மதுரை மாவட்டங்கள் அவற்றைச் சார்ந்த பாளையங்கள் யாவும் இராமநாதபுரம் மாவட்டத்துக்குட்பட்டு திரு. ஜி. பாரிஷ் அவர்கள் ஆட்சியில் ஒரு மாவட்ட எல்லை முதல்வர் ஆட்சி எல்லையாக (Collectorate) இருந்தது. சுருக்கமாய் இராமநாதபுரம் திண்டுக்கல், மதுரை மாவட்டங்கள் என்ற சிறு பெயர் பொது வழக்கத்திலிருந்து வந்தது. சில வேளைகளில் இராமநாதபுர மாவட்டம் என்று மட்டும் அழைக்கப்பட்டது. 1808-ல் இராமநாதபுரம் மாவட்டம் ஒழிக்கப்பட்டது. திருநெல்வேலி பாளையங்கள் என்று அழைக்கப்பட்ட இருபத்தொன்பது சிறு ஜமீன்தாரிகள் திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.