பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 30


இருந்ததாகவும் அது நம்பப்பட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார். பெண்கடவுள் துர்க்கை அல்லது குமரியின் வரத்திற்காகச் செய்யப்படும் இம்மாதாந்தரத் தீர்த்தமாடும் வழக்கம் இப்பொழுதும் கன்னியாகுமரியில் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. ஆனால், முற்காலத்தைப் போன்று தீவிரமாகச் செய்யப்படுவதில்லை. இந்த இடத்திற்குப் பெயர் ‘குமாரி’ அதாவது ‘கன்னி’ என்ற வடமொழிச் சொல்லிலிருந்தே வந்தது. இது துர்க்கைக் கடவுளின் மற்றொரு பெயராகும். துர்க்கையே அவ்விடத்தின் சிறந்த தெய்வம். ஆனால், தெளிவான தமிழிலுள்ள ‘குமார்’ என்ற சொல்லிலிருந்தே இப்பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். சாதாரணத் தமிழில் ‘கொமாரி’ என்பது ‘குமரி’ என்றாயிற்று. முனைக்கு அருகே வாழும் மக்களின் கொச்சைத் தமிழில் கன்னி என்பது குமாரி அல்லது கொமாரி இரண்டுமல்ல. ஆனால் ‘கொமார்’ என்று உச்சரிக்கப்பட்டு வரும் ‘குமார்’ என்னும் சொல்லே கன்னியைக் குறிக்கின்றது. வடமொழிப் பெயரின் கொச்சைத் தமிழ்த் திரிபாகிய இச்சொல், பெரிப்புளூஸின் ஆசிரியர் அந்த இடத்திற்குக் கொடுத்திருக்கும் பெயருடன் ஒத்திருக்கிறது. (இப்போதும் திருநெல்வேலி மாவட்டத்தில் கன்னிப் பெண்களைக் ‘குமரு’ என்று குறிக்கும் வழக்கம் உள்ளது. மேலும் பழந்தமிழர் தோன்றியதாகக் கருதப்படும் இடத்தின் பெயர் வடமொழியிலிருந்து வந்திருக்குமா? - ந.ச.). கிரேக்க மாலுமிகள் கண்ட இக்கன்னியாகுமரி முனையிலுள்ள துறைமுகம் கடலின் படையெடுப்பால் இருந்த இடம் தெரியாமல் முழுகிவிட்டது. ஆனால், நல்ல தண்ணீருள்ள கிணறு ஒன்றுமட்டும் மலைகளின் இடையில் கடலிலிருந்து சிறிது தொலைவில் இருக்கிறது.

தமிழ்க் குமாரி, வடமொழிக் குமாரி இரண்டும் புராண ஆசிரியர்களால் இந்தியாவின் ஏழு புண்ணிய நதிகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. தீபகற்பத்தின் தென்பகுதிக்கும் அதே பெயர் வழங்கப்படுகிறது. பரதன் மகளாகிய குமாரியினால் இப்பெயர் ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது. முதல் இந்திய அரசனாகிய பரதன் மகள் குமாரி. அவள் தந்தையால் தென்னாட்டிற்கு அரசியாக்கப்பட்டாள். குமரிக் கடற்கரையின் தலைவன் அதாவது ‘குமாரி சர்ப்பன்’ என்பது பாண்டிய அரசனது பெயர். ஏனெனில், குமரியை அடுத்துள்ள நிலங்கள் அத்தனையும் பாண்டியனைச் சேர்ந்தது. தாமிரபரணி, குமரி ஆறு என்று வழங்கப்பட்டது என்றும் கொள்ளலாம். ஆனால், குமாரி என்ற பெயர் இலக்கியங்களில் எந்த நதியையும் குறிக்கும் பெயராய் இல்லையாதலால் அவ்வாறு இருக்க இயலாது (கால்டுவெல் சங்கநூல்களை அறியார். அதனால் புறம். 67-6 அவர் பார்க்கவில்லை!