பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 400


ளிலும் தகுதியுடையவராய் சமயப்பற்றும், ஆர்வமும் முன்யோசனை மிகுதியும் உடையவராக அவர் விளங்கினார் என்றாலும், குறைப்பயனால் அவர் திருநெல்வேலியில் தங்கியிருந்த காலம் மிகக் குறைந்த காலமாக இருந்தது என்பதை அவருடைய இதழ் (பத்திரிகை)கள் எடுத்துக் காட்டுகின்றன. 1792 ஆம் ஆண்டு ஜனவரி மாதத் தொடக்கத்தில், பாளையங் கோட்டைக்கு வந்து சில மாதங்களே பயணம் செய்தார். திரு. டோரின், 1792இல் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, கிழக்கு இந்தியக் கம்பெனியின் சார்பில் நவாபின் வரிகளை வசூல் செய்யும் அலுவலராக அலுவலக ஆணையின் பேரில் அப்போது முதன் முதல் வருகை புரிந்திருந்தார். ஜேனிக், டோரின் குழு களக்காடு, பாபநாசம், இன்னும் மலைத் தொடர்ப் பகுதியிலிருந்த மற்ற இடங்கள், மலைநாட்டிற் புகுந்து செல்வது நீங்கலாக ஏனைய இடங்களைப் பாணா தீர்த்தம் அருவிவரை சென்று கண்டனர். பிப்ரவரி 12 ஆம் தேதி ஜேனிக் குற்றாலத்திற்குச் சென்றார். 25 ஆம் தேதி பாளையங்கோட்டைக்குத் திரும்பினார். மார்ச் முதல் தேதி கொடிய காட்டு மலைக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். அக்குழுவில் பலர் அதே காய்ச்சலால் பீடிக்கப்பட்டனர். அவர்களுள் பலர் இறந்தனர். ஆண்டின் அந்தக் காலத்தில் மலைப்பகுதிகளில் இருப்பது தீமையானது என்பதை அப்போது ஐரோப்பியர்கள் தெளிவாக உணர்ந்திருக்க வில்லை. இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகே (அதாவது 1800 இல்) ஜெனரல் வெல்ஷ், தென்மேற்குப் பருவக் காற்றால் மழை பெய்யும் காலத்தில்தான் அம்மலைகள் ஐரோப்பியர்களுக்கு நலனை விளைவிக்கும் என்ற சிறந்த உண்மையை எடுத்துக்காட்டினார். ஜேனிக் அக்காய்ச்சலுடன் பல மாதங்கள் போராடினார் என்றாலும் அதே சமயத்தில் மனச் சோர்வு இன்றி குறிப்பிடத்தக்க வெற்றியுடன் தன் வேலைகளையும் செய்து கொண்டிருந்தார். அந்த ஆண்டில் தூத்துக்குடி, மணப்பாறை முதலிய இடங்களுக்குச் சென்றார். இந்த இரண்டு இடங்களும் டச்சுக்காரர்களுக்குச் சொந்தமாயிருந்தன. ஒவ்வொரு இடத்திலும் நாட்டு அடியார் குழு மதபோதகரின் கண்காணிப்பில் இருந்ததைக் கண்டார். மணப்பாரிலிருந்த அடியார் குழு அக்காலத்தில் திருநெல்வேலியில் மிகுதியாக வாழ்ந்து வந்த நெசவாளிகளை முக்கியமாகக் கொண்டிருந்தது. அக்காலத்துத் துத்துக்குடி ஆளுநராக இருந்தவர் திரு. மெக்கான். அவர் ஜேனிக்கிடம் மிகுந்த நட்பு பாராட்டியதுடன் அவருடைய திட்டங்களில் உதவி செய்ய விருப்புடையவராகவும் இருந்தார். காய்ச்சல் தொடர்ந்து, கொடுமை செய்யவே ஜேனிக், 1792 ஆம் ஆண்டின் இறுதியில் திருநெல்வேலியை விட்டு நீங்கிச் சிறிது காலம் தஞ்சாவூருக்குத் திரும்ப வேண்டுவது இன்றியமையாதது என்று உணர்ந்தார். ஓர் ஆண்டும் இரண்டு நாட்களுக்கும் பிறகு தஞ்சாவூரைச் சென்று சேர்ந்தார்.