பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 436


நம்மாழ்வார்

பெரிய சிற்றிலக்கியம் அல்லது திருவாய்மொழி என்பது வைஷ்ண இலக்கியத்தின் பழமையான முதன்மையானப் பகுதியாகக் கருதப்படுகிறது. இதில் மொத்தமாக 4000 பாடல்கள் உள்ளன. இவற்றில் 1000 பாடல்கள் திருநெல்வேலியை சார்ந்துள்ளன. நம்மாழ்வார் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். வைஷட் அத்வைதம் அல்லது ஸ்ரீவைஷ்ணவம் என்ற அமைப்பை நிறுவிய இராமானுசஆச்சாரியாவின் சீடர். இத்தகைய பார்ப்பன ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் 'அய்யங்கார்' என்று அழைக்கப்பட்டனர். நம்மாழ்வாரின் காலத்தை கணிக்க முடியவில்லை. ஆனால் இவரது குருவான இராமானுசர் 12 ஆம் நூற்றாண்டின் இடையில் வாழ்ந்தார். நம்மாழ்வாரின் பெயரால் இங்கு ஆழ்வார் திருநகரி என்ற ஊர் உள்ளது. இது 'ஆழ்வார் திருநெல்வேலி' என்றும் அழைக்கப்படும். இவ்வூரின் பழைய பெயர் 'குறுங்கை' அல்லது 'குறுங்காபுரி என்பதாகும். கல்வெட்டில் இதன் பெயர் 'தென்கரை' என்று குறிக்கப்படுகின்றது. ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரியின் தென் புறம் உள்ளது. இதுவும் ஆழ்வார்களின் புனித நகராகத் திகழ்கின்றது. 5600 மக்கள் உள்ள இந்நகரம் வைணவத் தலங்களுள் ஒன்று. ஆழ்வாரின் இயற் பெயர் சடகோபராகும். இது வைணவர்களிடம் தற்போது பொதுப் பெயராக விளங்குகின்றது. இவரது தந்தை கலிமாறன் பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றலாகும். மாறன் என்பதற்குப் பாண்டியன் என்று பொருள். நம்மாழ்வார் என்பதற்கு நமது ஆழ்வார் என்று பொருள். பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராக இருப்பினும் இவரது பாடல்கள் பெரிய திருவாய் மொழியில் நான்கில் ஒரு பங்காகும்.

மகாபாரத மொழி பெயர்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் மகாபாரத மொழி பெயர்ப்பானது ஸ்ரீவில்லிபுத்துரில் வைணவ பிராமணரான சர்வபெளன அய்யங்காரால் எழுதப்பட்டது. பிறந்த ஊரால் இவர் வில்லிபுத்துரார் என்று அழைக்கப் பட்டார். இக்காப்பியம் புகழ் பெற்ற போது இவ்வூர் திரு. ஸ்ரீ என்னும் அடையைப் பெற்றது. இப்போது 'ஸ்ரீ' என்ற அடைவிலக்கப்படுமானால் பெயர் முழுமையாகாது. இப்புலவர் ஆழ்வார் என்று மதிப்புடன் அழைக் கப்படுவார். இராமாயணம் எழுதிய கம்பருக்கும் ஆழ்வார் என்ற பெயர் உண்டு. காவிய அழகில் வில்லிபாரதம் கம்பராமாயணத்தோடும், சிந் தாமணி, குறள் போன்றவற்றோடும் ஒப்புமையுடையது. இதனுடைய ஒரு பகுதி பல்கலைக் கழக மாணவர்களுக்குப் பாடப் பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.

இப்புலவரின் காலம் தெரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.