பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37 கால்டுவெல்


செய்யுள் இயற்றச் செய்தனர் (எல்லைத் - தொல்லை! தொல்லையானதுதான்! தொல்லை என்பதற்குப் பழமையானது என்றும் பொருள்! இந்தத் தொல்லைக்குப் புலவர்களும் தொல்லை! அவர்களும் மனிதர்கள் தானே! - ந.ச.). பொது எல்லையாகக் கொள்ளப்பட்ட வெள்ளாறு போர்ட்டோ நோவோ (பரங்கிப்பேட்டை - ந.ச.). அருகில் கடலில் கூடும் வெள்ளாறு அன்று. ஏனெனில், இது சோழ நாட்டிலேயே மிக்க செழுமை கொழித்த பகுதியாகிய தஞ்சாவூரைச் சோழ நாட்டிலிருந்து பிரித்துவிடுகின்றது. இங்கே சொல்லப்பட்ட வெள்ளாறு, திருச்சிராப்பள்ளியிலுள்ள மருங்காபுரிக்கு அருகில் மலைகளில் தோன்றி, தென்கிழக்கில் புதுக்கோட்டை மாநிலம் (சமஸ்தானம்) வழியாய் ஓடிக் காலிமியர் முனைக்குத் தெற்கேயுள்ள பால்கன் நீரிணைப்பில் (ஜலசந்தியில்) கடலுடன் கலக்கிறது. நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள், பெண்கள் தங்களுடைய நாட்டு எல்லையாகிய வெள்ளாற்றைக் கடந்து செல்வது தீக்குறி (அபசகுனம்) என்று கருதி வந்த பழமையான வழக்காறு இந்த வெள்ளாறு, அதே வெள்ளாறுதான் என்பதை உறுதிப்படுத்துகிறது. (பார்க்க: 1, சோமலெ - ‘செட்டிநாடும் தமிழும்’, 2. வயி. இராமநாதன் செட்டியார் - ‘நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு’ - ந.ச.) இந்த ஒற்றுமைப்படி, திருச்சிராப்பள்ளி சோழர்களுக்கேயன்றி, பாண்டியர்களுக்கு உரிமையாவதன்று; பழங்காலத்தில் திருச்சிக்கருகேயுள்ள உறையூர் (சங்க இலக்கியம் போற்றும் உறந்தை - ந.ச.) டாலமியால் ஒர்தெளரா என்று வழங்கப்படுவது, பழைய சோழர்களின் தலைநகராயிருந்தது என்பதில் ஐயமில்லை. நாயக்கர் காலத்திலேதான் திருச்சிராப்பள்ளி மதுரை அரசர்களின் மாநிலத்தின் (இராச்சியத்தின்) ஒரு பகுதி ஆயிற்று (பார்க்க. அ.கி. பரந்தாமனார் - ‘மதுரை நாயக்கர் வரலாறு’). பிற்கால நாயக்கர்களின் தலைநகரெனக் கருதப்பட்டு வந்தது மதுரையன்று; திருச்சிராப்பள்ளியே. பாண்டி நாட்டின் தென்னெல்லை கன்னியாகுமரியாயிருந்தது. செய்யுள் இயற்றப்பட்ட காலத்தில் பாண்டிநாடு பரவியிருந்த மேற்குக் கோடி, பாண்டி நாட்டின் எல்லையாகிய ‘பெருவழி’ என்று வழங்கப்பட்டது. மற்றொரு செய்யுளில் அதே வழி ‘வழுதிகால்’ பாண்டிய மன்னன் வழி - என்று வழங்கப்படுகிறது.1 (பாண்டிய அரசனது இலக்கியப் பெயர் ‘வழுதி’ என்பது. கால் என்பது வழி. அச்சன்கோவில் என்பது சிவன் கோவில். அச்சன் - அப்பன், தகப்பன். இங்குக் குறிப்பிடப்பட்ட தகப்பன் சிவன். அப்பன் என்பதற்குப் பதிலாக அச்சன் என்ற சொல் பழக்கத்திலிருந்ததாகப் பழந்தமிழ் இலக்கணத்தில் மேற்கு நாடாகிய திருவாங்கூர் அதாவது குடநாட்டுத் தமிழுக்கு எடுத்துக்காட்டாகச்