பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39 கால்டுவெல்


நகரம் திருவாங்கூருக்கு உரியதாய் இருக்கும். ஆனால், நாஞ்சில்நாடு முன் போலப் பாண்டிநாட்டின் ஒரு பகுதியாகவே இருக்கும். மற்றொரு சேரனுடைய செய்யுள் சேரநாட்டின் மேற்கு எல்லை செங்கோட்டை என்று கூறுகிறது. இது இப்போதிருக்கும் அமைப்புக்குச் சரியாய் உள்ளது. இப்போது திருநெல்வேலிக்கும் திருவாங்கூருக்கும் இடையேயுள்ள எல்லை செங்கோட்டை நகர் வழியே செல்கிறது என்று நான் நம்புகிறேன். முற்காலத்தில் அது கிழக்கே சற்றுத் தள்ளி அமைந்திருந்ததால் முழு நகரமும் திருவாங்கூருக்குச் சொந்தமாயிருந்தது. செங்கோட்டை வட்டம் (தாலுக்கா) என்று வழங்கப்படும் செங்கோட்டை நகருக்கும் மலைகளுக்குமிடையேயுள்ள மாவட்டம் முதலில் பாண்டியர்களுக்குச் சொந்தமாயிருந்ததென்பது தெரிகிறது; ஆனால், பல நூற்றாண்டுகள் வரையில் திருவாங்கூரின் பகுதியாயிருந்தது. சிறிது காலம் இது ஆர்க்காட்டு நவாபுவின் வசத்திலும் பின்னர்த் திருவாங்கூர்ப் பேரரசர் வசத்திலுமிருந்தது (பார்க்க : பிற்சேர்க்கை); ஆனால், இறுதியில் 1809 இல் திருவாங்கூருடன் இணைக்கப்பட்டது. அச்சன்கோவில் கணவாய்க்குத் தெற்கிலேயே செங்கோட்டை அமைந்திருப்பதால், அதுவே பாண்டிய நாட்டின் மேற்குக் கோடியெனக் கருதுவதற்கும் தகுதியுடையதாயிருக்கிறது.

மூன்று நாடுகளின் பரப்பளவும் வெவ்வேறு பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளன. அதன்படி சேரநாடு 800 சதுரமைல்; சோழநாடு 240 சதுரமைல்; பாண்டி நாடு 560 சதுரமைல்.

பாண்டிய அரசர்கள்

நாம் முன்னரே பார்த்ததுபோல அசோகரின் கல்வெட்டுகள், மகாவமிசத்திலிருக்கும் குறிப்புகள், மகாபாரதம், மெகஸ்தனிசின் குறிப்புகள் முதலியவைகளினின்றும், கிறித்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பாண்டி நாடும் பாண்டிய அரச வழியும் தோன்றிய வரலாற்றை அறிய இயல்கின்றது. இக் குறிப்புகளிலிருந்தே அரச பரம்பரை ஒன்று தோன்றியிருந்தது என்பதை உறுதியாகத் தீர்மானிக்கலாம். ஆனால், எந்த அரசனது பெயரும் கிட்டவில்லை. அவர்கள் காலத்தில் கிறித்து பிறந்தபின் கிரேக்க நிலநூல் வரைந்த குறிப்புகளினின்றும் பாண்டிய மாநிலம் இருந்ததுடன் அது இந்திய அரசு நிலங்களிடையே மிகச் சிறந்த நிலையையடைந்திருந்தது என்பதும் புலனாகிறது. எனினும், அக்குறிப்புகளிலிருந்தும் எந்தப் பாண்டிய அரசன் பெயரும் தெரியவில்லை. கிரேக்கர்களின் வருகைக்குப் பின்னும் மகாவமிசம் எழுதப்பட்ட காலத்திற்கு முன்னும் கிடைத்துள்ள அடுத்த நம்பிக்கைக்குரிய குறிப்பு வராகமிகிரர் எழுதிய ‘பிருகத் சம்கிதா’