பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 40


என்னும் நூலில் உள்ளது. வராக மிகிரர், கி.பி.404-இல் வாழ்ந்த இந்திய வானவியல் அறிஞர், ‘பிரகத்சம்கிதா’ அவரது வானவியல் அல்லது சதக நூலாகும். (டாக்டர் கெர்ன் மொழிபெயர்ப்புப் பார்க்க). தற்செயலாக அவர் பாண்டிய அரசன், தாமிரபரணி ஆறு, சங்கு, முத்துக் குளித்தல் முதலியவைகளைப் பற்றிக் குறித்துள்ளார். மகாபாரதம் புராணங்கள் முதலியவற்றில் கூறப்பட்டிருப்பது போல அந்நூலில் சோழர்களினின்றும் வேறாகத் ‘திராவிடர்’ என்பார் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களைப் பாண்டியர்கள் என்றுதான் கொள்ள வேண்டும். கிரேக்க இந்திய அறிஞர்களால் குறிக்கப்படாத பாண்டிய அரசர்களுடைய வரிசை ஒன்றைப் பாண்டியனுடைய ஆதாரங்களினின்றும் நான் தயாரித்துக் கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், உள்நாட்டுக் கவிஞர்கள், பாணர்களால் குறிக்கப்பட்டிருக்கும் பாண்டிய அரச வரிசையிலிருக்கும் எந்தப் பெயரிலும் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். (எந்த மொழியிலும் இந்த நிலை உண்டு. பதரிலிருந்து மணியைப் பிரிப்பதே விருப்பமுடைய ஆய்வாளர் வேலை. அதில் சோர்வுக்கு இடம் எது - ந.ச.). பாண்டியர்கள், அவர்களைப் பற்றிய செய்திகள் முதலியவைகளைப் பற்றிய புறச்சான்றுகளைப் பற்றிச் சொல்ல நான் தயாராகவுள்ளேன். ஆனால், நாணயங்களிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும், அதேகாலத்து நம்பிக்கையான செய்திகள் கிட்டாததால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அரச வரிசையை நம்புவதோ ஒப்புக்கொள்வதோ பெரும்பிழையாகும். இதைப் பற்றித் தெளிவாக அறிய விரும்புபவர்கள் வில்சனுடைய ‘பாண்டிய அரசின் வரலாற்றுக்குறிப்பு’ (Professor Wilson's, Historical sketch of the kingdom of pandya) என்னும் நூலையும், நெல்சனுடைய ‘மெஜுரா மானுவல்’ பகுதி - 2 பக்கம் 3ல் (Nelson's Madura Manual Part II,p.3) உள்ள ‘மதுரைத் தலபுராணச் சுருக்கம்’ (Abstract of the madura Sthala purana) என்னும் பகுதியையும், பாண்டிய அரச வழியைத் தோற்றுவித்தவரெனக் கருதப்படும் குலசேகர அரசனிலிருந்து குப்ஜன் அல்லது சுந்தரன் என்ற கடைசி அரசன் வரை உள்ள அரச வரிசையுடன் சேர்த்துப் படித்துக் கொள்ளலாம். இந்நூல்களை மேற்போக்காக ஆராய்ந்தாலும் இவை முழுவதும் கட்டுக்கதைகளாகவே உள்ளது தெரியும். மதுரையைப் பற்றிய மற்றொரு தமிழ்ப்புராணம் திருவிளையாடற் புராணம். அது நம்பவியலாத அதிசயங்களடங்கிய மூலத்தைவிட அதிகமான கட்டுக் கதைகள் நிரம்பியவை (கிறித்துவ சமய பைபிளும் பிற எச்சமய காப்பியங்களும்? - ந.ச.). அதன் மொழிபெயர்ப்பு, கவிஞனும்