பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 42


காண்க - ந.ச.). மேலும், வீரபாண்டிய அளவுகோல் ஒன்று அக்காலத்தில் அரசாட்சியில் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது அறியப்படுகின்றது.

சோழர்களின் ஆதிக்கம்

சோழர்கள் பாண்டிநாடு முழுவதையும் கைப்பற்றியிருந்தார்கள் என்பதைப் பற்றி மதுரைப் புராணத்தில் எவ்விதக் குறிப்பும் இல்லை. மதுரை அரச வரிசையில் எந்தச் சோழ அரசனது பெயரும் இல்லை. புராணங்கள் எழுதப்பட்டதோ, அன்றிச் சோழர்களுடைய ஆதிக்கம் தொடங்குவதற்கு முன்பே அரச வரிசை முடிக்கப்பட்டதோ இதற்குக் காரணமாய் இருக்க இயலாது. ஏனெனில், அரச வரிசையிலுள்ள கடைசி அரசன் குப்சன் அல்லது சுந்தரன். இவன் கி.பி.1064 இல் தன் அரசாட்சியைப் பாண்டிநாட்டில் தொடங்கியது முதல் சோழ அரசனாகிய இராசேந்திர சோழன் காலத்திற்கு ஏறக்குறைய 200 ஆண்டுகட்குப் பின்னரே நெடுங்காலம் ஆட்சி செய்தான். இராசேந்திர சோழன் பாண்டிய பேரரசைப் போர் வெற்றியால் பெற்றானா, அல்லது வற்புறுத்தலின்றி ஒப்புதலினால் பெற்றானா என்பது ஐயப்பாடாயுள்ளது. ஆனால், அவன் வெற்றியால் அந்நாட்டைக் கைப்பற்றியிருத்தல் இயலாதென்று நான் நினைக்கிறேன். ஏனெனில், கன்னியாகுமரிக்கு அருகேயுள்ள ஒரு பழங்கோவிலிருந்து அவன் காலத்து இரு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. ஒன்று, அவன் ஆட்சிக்காலத்தில் நான்காவது ஆண்டைக் குறிக்கும் காலம்; மற்றொன்று, ஐந்தாவது ஆண்டைக் குறிப்பது. இவற்றில் துங்கபத்திரை நதிக்கரையிலுள்ள சாளுக்கிய மரபைச் சேர்ந்த சைன அரசனாகிய அவமல்லனை வென்றமை குறிக்கப்பட்டிருக்கிறது. இதே போலப் பாண்டி நாட்டையும் போரிட்டு வென்று கைப்பற்றியிருப்பின், அந்நிகழ்ச்சியும் இதில் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். சோழ நாட்டில் வாழ்பவனாகிய இராசேந்திர சோழன் பாண்டி நாட்டைத் தன் எல்லையுடன் இணைத்துக் கொண்டான் என்னுங் கூற்றிற்கு மதிப்பில்லை. ஏனெனில், சிற்றரசர்களைக் கூட அவர்களுடைய கவிஞர்களும் பாணர்களும் தங்கள் அரசன் மாற்றார் அனைவரையும் வெற்றி கண்டதாகப் புகழ்வது வழக்கம். வெற்றிகண்ட அல்லது சமரசமாய் இணைத்துக் கொண்ட பகுதிகளிலுள்ள கோவில்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் இருக்கும் செய்தியோடு ஒப்பிடும்போது அவற்றின் மதிப்பு மிகவும் மாறுபடுகிறது. பழைய அரசனுடைய குடிமக்களாயிருந்தபோது அவனைப் பற்றி எழுதியவர்கள் இன்று வந்த புதிய அரசர்களைப் புகழ்வதில் ஈடுபடுவார்கள் (முக்காலத்துக்கும் - இக்காலத்துக்கும் - எக்காலத்துக்கும் உரிய உண்மை போலும் - ந.ச.).