பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45 கால்டுவெல்


முக்கியமான இடம் பெற்றிருக்கிறது. ஆனால், திருநெல்வேலிக் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கும் கரிகாற்சோழன் இவன்தானா அல்லது இப்பெயரையே கொண்ட மற்றொருவனா என்பது துணிவாகத் தெரியவில்லை. தஞ்சாவூரை ஆண்ட கரிகாற்சோழன் சுமார் கி.பி.950 இல் இருந்தவன் என டாக்டர் பர்ன்வெல் குறிப்பிடுகிறார். திருநெல்வேலிக் கரிகாலனைப் போலவே குலோத்துங்க சோழனுக்குப் பின்வந்த எவர்க்கும் இது மிக முந்திய காலமாயுள்ளது. இராமானுசரைத் துன்புறுத்திய கரிகாற்சோழன் காலத்திற்கும் இது முந்தியதாய் இருக்கின்றது. கரிகாலனுடைய தொல்லைகளினின்றும் தப்பியோடிய இராமானுஜர் அவரால் ஜைன மதத்தினின்றும் வைணவமதத்திற்கு மாற்றப்பட்ட துவார சமுத்திர பல்லாள அரசனாகிய பிட்டிதேவனது அரசவையை அடைந்தார் என்பது கூறப்படுகிறது. இந்த அரசன் வைஷ்ணவனான பிறகு ‘விஷ்ணுவர்த்தனன்’ என்ற புதுப்பெயரை ஏற்றுக் கொண்டான். இச்சம்பவம் எப்பொழுதும் 12 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்ததாகவே கூறப்படுகிறது. ரைஸ் என்பவர் அக்காலம் கி.பி.1117 என்று மைசூர் கல்வெட்டில் குறிக்கிறார். இது தென்னிந்திய வரலாற்றிலேயே மிக முக்கியமான நூற்றாண்டாகும். ஏனெனில், இதுதான்நம்பக்கூடிய சரியான தேதிகளைக் குறிக்கிறது. மேலும், இந்த ஆண்டிற்கு முன்னும்பின்னும் உள்ள காலத்தைக் கணக்கிட இயலும். உதாரணமாக தமிழ்க் காவியமாகிய இராமாயண காவியத்தின் ஆசிரியராகிய கம்பர் தாமியற்றிய சடகோபர் அந்தாதியில் இராமானுஜரைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். கம்பரது காலம் கி.பி.1100 ஆக இருக்கலாம். ஏதோ ஓர் இராமாயண நினைவுப் பாடல் கூறுவது போலக் கி.பி.886 ஆய் இருக்கவியலாது என்பதை நாம் அறிவோம். (பார்க்க: கம்பன் காவியம் - எஸ். வையாபுரிப்பிள்ளை). 12 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சோழ நாட்டில் கரிகாற்சோழன் என்பவன் வாழ்ந்ததே தெரியவில்லை. சூழ்நிலையைப் பார்க்கும்போது இராசேந்திர சோழன், விக்கிரமசோழன், குலோத்துங்க சோழன் ஆகிய மூவரும் முந்தியவரே. ஆனால், அதே பெயரையுடைய சிறந்த சைவ இளவரசன் ஒருவன் உள்நாட்டிலேயே இராசேந்திரன் இறந்ததற்கும் குலோத்துங்கள் பட்டத்திற்கு வந்ததற்குமிடையே உள்ள காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். ஆயினும் கரிகாலன் இராமானுசரைக் கொடுமைப் படுத்தியதாகக் கூறப்படுவது கர்ணபரம்பரைக் கதையே. ஆதலால், அது ஒரு முக்கியமான செய்தி அன்று. விஷ்ணுவர்த்தனுடைய சமயமாற்றக் காலத்திற்குத் தக்க கல்வெட்டுச் சான்றுகள் இருக்கின்றன.

இக்காலத்தில் சோழ பாண்டிய அரச வரிசையில் குலசேகர