பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 46


தேவன் அரசனாய் இருந்தானெனக் கூறுகிறார்கள். இவன் மகம்மதிய வரலாற்று ஆசிரியர் கூறுவது போலச் சுந்தர பாண்டியனுக்கு முன் பட்டத்திற்கு வந்தவனும் அவர் கூற்றின்படி அவனுக்குத் தந்தையுமாகிய காளேசதேவன் என்பவனாய் இருக்கக் கூடும். நான் குலசேகரனுடைய பல கல்வெட்டுகளைத் திருநெல்வேலியிற் கண்டிருக்கிறேன். அவற்றுள் ஒன்று திருநெல்வேலி கோவிற்சுவர்களுள் இருக்கிறது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்புவனத்திலிருந்து கிடைத்தனவென்று சர் வால்டர் எலியட்டு என்பவர் சேகரித்து வைத்திருக்கும் கல்வெட்டுகளுள் இரண்டு உள்ளன. ஆனால், அவற்றுள் எதிலும் அவர் சோழரென்றோ அல்லது பாண்டியரென்றோ குறிக்கப்படவில்லை. இதே பெயரையுடைய இருவர் இருந்தனரா அல்லது ஒருவர் தாமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இப்பெயரையுடையவர் ஒருவர், கி.பி.1173 இல் சிங்களவர்களால் வெல்லப்பட்டார் என்றும், மற்றவர் கி.பி.1310 இல் அவர்களை வென்று புத்தபிரானின் பல நினைவுச் சின்னங்களைக் கைப்பற்றிக் கொண்டு வந்தார் என்றும் கூறப்படுகிறது. இச்செய்திக்குக் காரணம் சிங்களவர்களுடைய சாசனங்களில் ஏற்பட்ட காலக் குழப்பமே என்ற எண்ணமே தோன்றுகிறது. மேலும், இப்பெயரையுடைய ஒரு அரசன் இருந்திருக்க வேண்டும் என்று வால்டர் எலியட்டு என்பவர் சாளுக்கியர்கள் நாட்டில் கண்ட கல்வெட்டுகளிலிருந்து அந்த ஒருவனே பெரிய அரசனாயும் அகன்ற எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பை ஆட்சி செய்தவனாயும் இருக்க வேண்டுமென்பது தெரிகிறது. குலசேகரதேவன் சோழ பாண்டிய வரிசையில் இடம்பெற வேண்டுமெனின், வீர பாண்டியன் என்று வழங்கப்படும் அரசர் பலருள் ஒருவனுக்கு இதைவிட முந்திய காலத்தைக் குறிப்பது அவசியமாயிருக்கிறது. குலசேகரனுடைய கல்வெட்டு ஒன்றில் வீரபாண்டியனுடைய அளவு கோலால் நிலங்கள் அளக்கப்பட்டு உபயோகத்திலிருந்தன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இது வீரபாண்டியன் குலசேகரனுக்கு ஒரு தலைமுறை அல்லது இரு தலைமுறைகளுக்கு முந்தியவன் என்பதை உணர்த்துகின்றது. ஆனால், அவன் சோழ பாண்டியனா, அல்லது இராசேந்திர சோழனுக்கு முந்திய பழைய பாண்டிய வரிசையிலுள்ள கடைசி அரசனா என்பது இன்றுவரை உறுதியாகத் தெரியவில்லை.

சோழபாண்டியர்கள்

தஞ்சாவூரிலிருந்து சேகரிதத சோழபாண்டிய அரச பரம்பரையைப் பற்றிய செய்திகளை டாக்டர் பர்னல் அன்பு கூர்ந்து