பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 48


இலக்கண ஆசிரியராகிய புத்தமித்திரர் இராசேந்திரனது நினைவாகத் தமது நூலிற்கு ‘வீர சோழியம்’ என்று பெயரிட்டிருப்பதால் இவன் புத்த மதத்தினருக்குச் சலுகைகள் காட்டிவந்திருக்க வேண்டுமென்பதும் தெரிகிறது (எப்படியெல்லாம் டாக்டர் கால்டுவெல் ஆராய்கிறார் என்பதைப் பாருங்கள்! - ந.ச.).

அரசர் பட்டியலில் அடுத்த பெயர் சுந்தர பாண்டிய சோழன் என்பது. இவன் இராசேந்திர சோழனுக்குச் சகோதரன் என்றும் அவனால் மதுரை அரச பீடத்தில் அமர்த்தப்பட்டான் என்றும் கூறப்படுகிறான். அப்படியானால், இவன் அரசனாய் இருந்தான் என்பதைவிட அரசப் பிரதிநிதியாய் இருந்தான் என்பதே பொருத்தமாகும். சுந்தர பாண்டிய சோழனது ஆட்சிக்காலத்திலேற்பட்ட தேதி இல்லாத ஒரு கல்வெட்டைத் திருநெல்வேலியிற் கண்டேன். மிகப் பிற்காலத்தவனாய் இருக்க வேண்டுமென்று நான் எண்ணியபோதிலும் இக்கல்வெட்டிற்குரிய அரசன் சுந்தரபாண்டியனே எனக் கருதுகிறேன், சுந்தர சோழ பாண்டியனது உண்மைப் பெயர் கங்கைகொண்ட சோழன் அல்லது கங்கைகொண்டான் என்பது. திருநெல்வேலி இரயில் மார்க்கத்தில் ஒரு இரயில் நிலையத்தைக் கொண்ட கிராமத்தின் பெயராகக் கங்கை கொண்டான் என்ற பெயர் இன்றும் நின்று நிலவுகின்றது (ஊர்ப்பெயர் வரலாற்றுக்கு உதவுகிறது! - ந.ச.). கருவூரிலுள்ள கல்வெட்டிலிருந்து இவன் சுந்தரபாண்டியன் என்ற பெயரை வைத்துக் கொண்டான் என்பது தெரிகிறது.

இராசேந்திர சோழனுக்குப்பின் வந்த விக்கிரமசோழன் என்னும் அவன் பதினைந்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என்றும், அவனுக்குப்பின் குலோத்துங்க சோழன் என்று திருநெல்வேலிக் கல்வெட்டுகளிலெல்லாம் காணப்படும் இரண்டாம் குலோத்துங்க சோழன் பட்டத்திற்கு வந்தான் என்றும் டாக்டர் பர்னல் வரிசைப்படுத்துகிறார்.

1128ல் விக்கிரம சோழனுக்குப்பின், குலோத்துங்க சோழன் அரசுரிமை ஏற்றான் என்று அவர் கூறுவதால், இராசேந்திரன் சிறப்புக்கும் குலோத்துங்கன் முடிசூட்டிற்கும் இடையே பதினைந்தாண்டுகள் இடைக்காலம் இருந்தது என்பது தெரிகிறது. சாளுக்கியக் கல்வெட்டுகளின் படி நாம் பார்த்தது போல இராசேந்திரனுக்குப்பின் உடனே குலோத்துங்கன் பட்டத்திற்கு வந்தான்.

சுந்தர பாண்டியன்

மதுரையை ஆண்ட மற்ற எல்லா அரசர்களைக் காட்டிலும் சுந்தர