பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49 கால்டுவெல்


பாண்டிய தேவனைப் பற்றிய செய்திகள் மிகுதியாக நமக்குக் கிட்டுகின்றன. மதுரைத் தலபுராணம், திருத்தொண்டர் புராணம் என்னும் இரண்டிலுமுள்ள கற்பனைக் கதைக் குறிப்புகள் மட்டுமின்றி, வரலாறு சம்பந்தப்பட்ட சிங்களவர்களுடைய குறிப்புகளிலும் மகம்திய வரலாற்று ஆசிரியர்களாகிய வாசப், ரசீதுதீன், அமீர் குஸ்ரு என்பவர்களின் இந்திய வரலாறுகளினின்றும் தக்க குறிப்புகள் நமக்குக் கிட்டுகின்றன. வெனீஷியப் பிரயாணியாகிய மார்க்கபோலோவின் நினைவுக் குறிப்புகளிலும் நமக்கு இது பற்றிய செய்திகள் கிட்டுகின்றன. எனினும், எராளமாகத் தோன்றும் இச்செய்திக் குவியல்களிலும் சிக்கறுக்க இயலாத பல குழப்பங்கள் உள்ளன. சுந்தரபாண்டியன் என்ற பெயரால் பாண்டிய அரசர் பலர் இருந்தனர் என்பது கருதப்படுகிறது. ஆயினும், இக்கருத்து உண்மைக்குப் பொருந்தியதன்று. வரலாற்றில் இத்துணைப் புகழ்வாய்ந்த இடம் பெறத்தக்கவனும் பல கல்வெட்டுகளினால் நாடாளும் வேந்தனாகக் குறிப்பிடத்தக்கவனும் ஒரே சுந்தரபாண்டியனாகவே இருந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. நமக்குக் கிடைத்துள்ள பல செய்திகளினின்றும் சுந்தரபாண்டியனைப் பற்றி உண்மையானவை யாகவும் ஒப்புக் கொள்ளக் கூடியனவாகவும் உள்ள குறிப்புகளை மட்டும் தேர்ந்தெடுக்க முயற்சி செய்வதே நம் கடமை.

1. முதலில் அவன் சைவனாய் இருந்து, பிறகு சைனனாய் மாறியமை புலனாகிறது. சோழ இளவரசியாகிய சுந்தரனுடைய மனைவியின் அழைப்பிற்கிணங்கச் சோழநாட்டைச் சேர்ந்த சிறந்த சைவ ஞானியாராகிய ஞானசம்பந்தர் மதுரைக்கு வந்து இயற்றிய பல அற்புதங்களின் மகிமையால் இறுதியாக அவன் சைவசமயத்திற்கே மாற்றப்பட்டான் என்பதும் தெரிகிறது. இச்சந்தர்ப்பத்தில் எண்ணாயிரம் சமணர்களை அவன் கழுவேற்றினான் என்பது கூறப்படுகிறது. இந்தச் சைவ சமய மாற்றத்திற்கு முன் அவன் கூனனாய் இருந்தான் எனவும், எனவே குப்ஜன் அல்லது கூனன் என்று வழங்கப்பட்டானெனவும், மதமாற்றத்திற்குப் பின் கூன் நிமிர்ந்துவிட்டதெனவும், அதனால் அவன் பெயர் அழகன் என்று பொருள்படும் சுந்தரன் என்று மாற்றப்பட்டதெனவும் கதை வழங்குகிறது. ஆனால், கல்வெட்டுகளிலிருந்து அவன் ஆட்சி செலுத்த ஆரம்பித்த காலத்திலேயே சுந்தரன் என்று வழங்கப்பட்டான் என்பது தெரிகிறது. எனவே குப்ஜன் அல்லது கூனன் என்ற பெயர் ‘கேலிப் பெய’ராகவே இருந்திருக்க வேண்டும்.

2. பழைய பாண்டிய அரசபரம்பரை அல்லது சோழ பாண்டிய அரசர்களில் கடைசி அரசனாய் அவன் இருந்தமை தெரிகிறது. அவன்