பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 50


பெயர் அரச பட்டியல் ஒவ்வொன்றிலும் இறுதியில் இருக்கிறது. மற்றப் பெயர்கள் யாவும் - அல்லது பெரும்பான்மைப் பெயர்கள் யாவும் - வெறுங்கற்பனைப் பெயர்களாயிருப்பினும், இறுதியிலிருக்கும் அவன் பெயர் வரலாற்றுத் தொடர்புடையதாயிருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஐயத்திற்குரிய இச்செய்தியானது, சுந்தர பாண்டியன் இறந்த பிறகு மதுரை இராச்சியம் மகம்மதியர்கள் வசமாயிற்று என்ற செய்தியைக் கூறும் மகம்மதிய வரலாற்று ஆசிரியர்கள் வாக்கால் உறுதியான செய்தியாய் மாறுகிறது. இதுபற்றி எல்லா உள்நாட்டுக் கதைகளும் மகம்மதியர்களின் செய்திகளோடு பொருந்தியுள்ளன. சுந்தரனது வாழ்நாளிலேயே மகம்மதியர்கள் தங்கள் பலத்தைப் பெருக்கிக் கொண்டு வந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளுக்குள் (1300-இல் எழுதப்பட்டது) ‘சுந்தர் பந்தி’ தேவனாய் இருந்தான். அவன் தன் சகோதரர் மூவருடன் வெவ்வேறு வழிகளில் வலிமையடைந்தான். அவனுடைய மந்திரியாயும் ஆலோசகனாவும் இருந்த ஷெயிக் ஜூமாலு தீனுடைய சகோதரனான மாலிக் அல்துகி உதீன் (Malic-altakikuddin) வசமே பாதன், மேல் பாதன், காயல் முதலியவைகளின் ஆட்சியையும் ஒப்படைத்திருந்தான்' என்று ரஷிதுதீன் என்பவர் எழுதுகிறார். இக்குறிப்பில் மார்க்கபோலோவின் சுந்தர் பந்தி தேவனையும் அவனுடைய உடன்பிறந்தோர்களையும் காணலாம். ‘692 அல்லாகிஸ்டி ஆண்டில் (கி.பி.1293) தேவன் இறந்தான். அவனுடைய செல்வமும் உடைமைகளும் அவனுடைய எதிரிகள் வசமாயின. அவனுக்குப்பின் வந்த ஷெயிக் ஜூமாலுதீன் எழுநூறு எருது வண்டி பாரமுள்ள நகை முதலியவற்றைப் பெற்றான் என்பது கூறப்படுகிறது. பெர்ஷிய வரலாற்று ஆசிரியராகிய வாகபுவும் சுருக்கமாக இதே விவரத்தைத் தருகிறார். இந்த வேற்றுமை பெருந்தவறுடையதன்று. இரு செய்திகளும் ஓரளவு உண்மையானவையேயாகும். ஏனெனில், முன்னமே மந்திரியே உண்மையான ஆட்சியை நடத்திவந்தமையால் அவனுடைய உடன்பிறந்தான் பெயரளவில் அரசுரிமையை ஏற்றிருத்தல் கூடும். கூன் பாண்டியன் எனப்பட்ட சுந்தர பாண்டியன், மதுரையிலுள்ள ஒரு மசூதிக்கு அளித்திருந்த மானியத்தைக் கி.பி.1573-இல் வீரப்ப நாயகன் நிரந்தர மானியமாக மாற்றினான் என்று நெல்சனுடைய மதுரை மானுவலிலுள்ள ஒரு கல்வெட்டிலிருந்து நாம் அறிகிறோம்.

இதனால், சுந்தரபாண்டியனது அரசவையில் மகம்மதியர்களுக்குச் செல்வாக்கு இருந்ததென்பது தெரிகிறது. ஓர் அங்குல இடம் பெற்றாலும், அதை ஒரு கெஜமாகப் பெருக்குமளவிற்கு விரைந்து மகம்மதியர்களின் அதிகாரம் அந்தக் காலத்தில் பரவிவந்தது (நடை நன்று - ந.ச.).