பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51 கால்டுவெல்


சுந்தர பாண்டியன் மகம்மதியர்களை ஆதரித்த காரணம்

தன் வாழ்நாளிலேயே இராச்சியத்தின் முக்கிய இடங்களை மகம்மதியர்களின் வசம் விட்டுவைக்கும் நிலைக்குச் சுந்தர பாண்டியன் முழுமையும் மகம்மதியர் வசப்பட்டதற்கான காரணம் மிகச் சுவையானது. வரலாற்றுத் தொடர்பான உண்மையாக ஒப்புக் கொள்ளக் கூடியதாயின் வாசபு குறிப்பிடும் காரணமே சிறந்த காரணமாய் இருக்கும். காலக் குறிப்பிலுள்ள வேற்றுமையே அதை ஒப்புக் கொள்வதற்கு இடையூறாய் இருக்கிறது. வாசபு தமது முக்கிய நிகழ்ச்சியைச் சரியாகக் குறிப்பிட்டபோதிலும், காலத்தைத் தவறுதலாகக் குறிப்பிடுகின்றார் என்று கொண்டால், இந்த இடையூற்றைத் தவிர்த்துவிடலாம். அவருடைய செய்திகள் நுட்பமானவையாகவும் உண்மையின் சாயலை உடையனவாகவுமிருக்கின்றன. அவற்றின்படி, காளதேவரெனும் குலசேகரதேவருக்கு மைந்தர் இருவர் இருந்தனர். ஒருவன் பட்டத்திற்கு உரியவனாகிய சுந்தரன்; மற்றவன் பட்டத்திற்கு உரிமையற்ற வீரபாண்டியன். வீரபாண்டியன் தந்திரத்திலும் நெஞ்சுறுதியிலும் சிறந்தவனாய் இருந்தமையால், அவனுடைய தந்தை அவனையே தனக்குப்பின் வாரிசாக நியமித்தான். இது சுந்தரனுக்குக் கோபமூட்டியது. அதனால், அவன் தன் தந்தையைக் கொன்றுவிட்டுத் தானே பட்டத்திற்கு வந்தான். இதற்குப்பின் வீரன் படைதிரட்டிச் சுந்தரனுடன் போர் புரிந்தான். முதலில் வீரன் தோற்று எதிரிகள் வசம் சிக்கினான். ஆனால், குலசேகரன் மகள் வயிற்று மகனான பெருமாளின் துணை கொண்டு சுந்தரனை எதிர்த்தான். இதற்கு அஞ்சிய சுந்தரன் டில்லிக்கு ஓடி அங்கே அல்லாவுதீன் பாதுகாப்பில் இருந்துவந்தான். அதற்குப்பின் வீரபாண்டியன் நிரந்தரமாக நாட்டை ஆட்சிபுரிந்தான் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். சிங்களவருடைய குறிப்புகளும் இந்தச் செய்திகளில் சிலவற்றைக் கூறுகின்றன. இரண்டு குறிப்புகளும் வீரன் பட்டத்திற்கு வந்தவரையிற் பொருத்தமாயிருக்கின்றன. உண்மையான பாண்டிய அரசர்களுடைய பட்டியலின் கடைசியில் சுந்தரபாண்டியன் பெயர் இருப்பதாலும், அவனுக்குப்பின் மகம்மதியர் ஆட்சிபுரிந்தனர் என்று இருப்பதாலும் சுந்தரபாண்டியன் டில்லியிலிருந்து முகம்மதியப் படைகளைத் தன்னோடு கூட்டிக் கொண்டு வந்து மீண்டும் தன் அரியணையைக் கைப்பற்றி இருக்கலாம். அரியணையை மீண்டும்பெற அழைத்துவந்த மகம்மதியப் படைகளே அவனுடைய அதிகாரம் முழுமையையும் கைப்பற்றப் போதுமானவையாய் இருந்திருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்கிறேன். எனினும், சுந்தரன் இறந்த பிறகு பட்டத்திற்கு வந்த அவன் தம்பியின் பங்கில் ஏராளமான சொத்துகள் சேர்ந்தன என்றும் மாலிக்-ஐ-