பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 54


அல்லது முதன்மையான தலைவனாகவோ இருந்திருக்க வேண்டும் என்று கொள்வதே தேவை. அவனுடைய பெயரே கல்வெட்டுகளில் இருக்கின்றன. இதில் எனக்குத் தோன்றுவது போலவே எவ்விதக் குறிப்பிட்ட இடையூறும் இருக்கவியலாது. சுந்தரபாண்டியனைப் பற்றிக் கூறும் தேதியிட்ட கல்வெட்டு ஒன்றை கண்டுபிடிக்கும்வரை மகம்மதிய சரித்திராசிரியர் கூறும் சுந்தரும் மார்க்கபோலோவின் செந்தரும் சைவசமயத்திற்கு மீண்டும் மாறிய சுந்தரன் அல்லது கூன் பாண்டியனும் ஒருவராகவே இருக்கக் கூடும் என்பதை ஏற்றுக் கொள்ளாததற்குத் தகுந்த மதிப்புள்ள காரணம் ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. திரு. மூர், தமது திருச்சிராப்பள்ளி மானுவலில் இவ்விவாதத்தைப் பற்றிய சுருக்கத்திற் கூறுவதாவது:

சுந்தர பாண்டியனைப் பற்றிக் கூறும் பல கல்வெட்டுகளின் பிரதிகளைத் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து நான் பெற்றேன். அவை அவன் நாட்டின் இந்தப் பகுதியையும் மதுரையையும் ஆண்டனன் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஆனால், அவற்றில் தேதி இல்லாததால் அவன் எக்காலத்தவன் என்ற சிக்கலான கேள்விக்குத் தக்க பதில் தரவில்லை.

மலபார்

மபார் என்பதற்கு வழி என்பது சாதாரணப் பொருள். சிலோனுக்கு அருகேயுள்ள சோழமண்டலக் கடற்கரைப் பகுதிக்குப் பழங்காலத்து அராபிய வியாபாரிகள் வைத்த பெயரே அது, ஐரோப்பியாவினின்றும் இலங்கைக்குச் செல்வதற்குரிய எளிய வழியாகவும் அது இருந்தது. ‘கொல்ல’த்திலிருந்து நெல்லூர் வரை பாண்டிய சோழ நாடுகளையும் அவற்றிற்குட்பட்ட கடற்கரைப் பிரதேசம் முழுவதையும் அது குறித்தது. 1286இல் குயாலிகான் அரசனுக்குக் கப்பம் கட்டும் தூரநாடுகளில் ஒன்றாக மபார் (மாபரா) இருந்தது என்று சீனர்களின் சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. 1280 ஆம் ஆண்டிலும் அதைத் தொடர்ந்த ஆண்டுகளிலும் மலபாருடன் சீன அரசியல் உறவு கொண்ட வியப்பும் சுவையும் மிக்க செய்திகளைப் பாந்தியர் என்பவர் தருகின்றார். மற்றக் குறிப்புகளுடன் சீன நூல்கள் ஐந்து சுல்தானிய சகோதரர்களைப் பற்றியும் சமலேட்டிங் ஜமால் உத்தீன் என்ற தூதுவரை மலபாரிலிருந்து மங்கோலிய அரசவைக்கு அனுப்பியதைப் பற்றியும் குறிக்கின்றன (கர்னல் யூலின் மார்க்கபோலோ, 2-273).

ஒன்பதாம் நூற்றாண்டில் மகம்மதிய அராபியர்கள் மலபார் கரையில் முதன் முதலில் குடியேறியது தெரிகிறது. பிறகு அவர்கள்