பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 56

 குறிப்பிடுகின்றார் (பக்.19). முத்துக்குளித்தல் நடைபெறுமிடமாகிய ககிலா என்று நிக்கோலா கான்டி அதைக் குறிப்பிடுகிறார் (பக்.7). வாஸ்கோடகாமா தமது முதற்கப்பல் பயணத்தின் போது அந்த இடம் காயல் என்றிருந்ததென்றும் அது முசல்மான் அரசனது சமஸ்தானமாய் இருந்ததென்றும் கிறிஸ்தவர்கள் அங்கிருந்தார்கள் என்றும் தாம் அறிந்ததாகக் கூறுகிறார். இங்கே முத்துகள் மிகுதியாய்க் கிடைத்தன. கியோவன்னி எம்போலிகாயப்டோவர்திமா பர்போஸாவைப் போலவே முத்துக் குளித்தல் நடைபெறுமிடம் என்பதைக் கண்டதாகக் கூறுகிறார். இக்குறிப்புகளால் அது அந்நாளிலும் செல்வந்தர்களான மகம்மதிய வியாபாரிகள் நிறைந்த சிறந்த துறைமுகப் பட்டினமாய் இருந்தது என்றும், மலபார் சோழமண்டலம் வங்காளம் முதலிய இடங்களினின்றும் பல கப்பல்கள் அங்கு அடிக்கடி வந்தன என்றும் அறிகிறோம். கடைசியாக நாம் சான்று காட்டிய ஆசிரியர்கள் காலத்தில் அது கெளலாமி (குயிலான்) அரசன் வசமிருந்தது. அவன் பெரும்பாலும் காயலில் தங்கியிருந்தான்.

“ஒரு காலத்தில் மிக்க புகழ்வாய்ந்த இந்தத் துறைமுகத்தின் உண்மையான இடத்தை இன்றுவரை வெளியான எந்தப் புத்தகமும் அடையாளம் கண்டு குறிப்பிட்டதாகத் தெரியவில்லை என்று நான் நினைக்கிறேன். எனக்கு முந்தியவர்களைப் போலவே நானும் இன்றும் இருந்துவரும் காயல்பட்டினமே அந்த இடமாய் இருந்ததாக எண்ணினேன். இது பற்றி உறுதியும் சுவையும் நிறைந்த செய்திகளை எனக்குக் கூறிய டாக்டர் கால்டுவெல்லின் அன்பிற்கு யான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.” அவர் மேலும் எழுதுவதாவது:

மார்க்கபோலோவின் காயல் ‘பழைய காயல்’ என்று அங்குள்ளோரால் பொதுவாக வழங்கப்படும். தவறுதலாகக் ‘கோயில்’ என்று இந்திய இராணுவப் படத்தில் குறிக்கப்பட்டிருக்கும் காயல், தாமிரபரணி ஆற்றின் கரையில் அது கடலொடு கலக்குமிடத்திலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் அமைந்திருக்கிறது. காயல் என்ற தமிழ்ச் சொல்லிற்குக் ‘கடற்கழி’, ‘கடலில் சேரும் ஆழமில்லாத நீர்நிலை’ என்பது பொருள். ஆற்றின் கூடு (சங்கமத்) துறையருகேயே இதைப் போன்ற பல காயல்கள் அல்லது கடற்கழிகள் இருப்பதைப் படங்களிற் காணலாம். இவற்றுள் பல காயல்கள் ஏறக்குறைய முழுதும் வரண்டுவிட்டன. அவற்றுள்ளும் பல காயல்களில் உப்பளங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. காயலின் எல்லையில் கட்டப்பட்ட ஒரு நகரத்திற்கு இயற்கையாகக் ‘காயல்’ என்ற வழக்குப் பெயர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதே காரணத்தால் இதை அடுத்துள்ள