பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

iv

பதிப்புரை

பேராசிரியர் ந. சஞ்சீவி எனது முனைவர் பட்டத்துக்கான வழிகாட்டி மட்டுமன்று; ஒரு மகனைப் போன்று என்னை நேசித்தவர்; ஒரு நண்பரைப் போன்று அறிவுரை கூறியவர். அவரோடு ஐந்தாண்டு காலம் மாணவராகவும், பத்தாண்டு காலம் நண்பராகவும் வாழும் பேறு எனக்குக் கிடைத்தது. அதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன். இந்நூலாக்கம் அவருக்கு நான் செய்யும் நன்றிகடன் மட்டுமன்று, எனக்கே நான் செய்து கொள்ளும் கடமை என்று கருதுகிறேன்.

நான் திருநெல்வேலிக்காரன். திக்கெல்லாம் புகழ் பரப்பும் திருநெல்வேலி என்பதில் எனக்கு பெரிதும் பெருமை உண்டு. எனது சீமையைப் பற்றி கால்டுவெல் எழுதியது என் மண்ணுக்குக் கிடைத்த மகத்தான சிறப்பு. என் பேராசிரியர் ஆங்கிலத்தில் உள்ள நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்ததில் எனக்கு இரட்டிப்பு பெருமை கிடைத்தது.

பேராசிரியர் ந. சஞ்சீவி வரலாற்றின் மீது பெரிதும் ஈடுபாடு கொண்டவர். இவர் பூலித்தேவர், கான்சாகிபு, மருது சகோதரர்கள், வேலூர் புரட்சி பற்றிய விடுதலை போராட்ட வரலாற்றினை விரிவாக எழுதியுள்ளார். அவர் தம் துணைவியாரோடு சேர்ந்து மொழியாக்கம் செய்ததே இந்நூல். இது தமிழ் வரலாற்று உலகிற்கு ஒரு நன்கொடை இவர்கள் இலக்கியத் தம்பதிகள் மட்டுமன்று; இலட்சிய தம்பதிகளும் கூட

இவர்களது அருமை புதல்வியார் முனைவர் எழிலரசியும் அவரது துணைவர் முனைவர் பாலசுப்பிரமணியமும் இந்நூல் வெளிவர அனுமதியும் ஆதரவும் தந்தனர். சத்யகங்கை இதழில் இது தொடராக வந்தது. அவற்றைச் சேகரித்து ஒழுங்கு படுத்தி வைத்திருந்தனர். இதற்காக தமிழ் உலகமும் திருநெல்வேலிக்காரர்களும் பெரிதும் கட ன்பட்டுள்ளனர். காவ்யா சார்பாக அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இவ்வாண்டு போலவே, இனி தொடர்ந்து ஆண்டு தோறும் இரு நூல்கள் வெளியிடும் ஆசை எனக்குண்டு. இதற்கு வாசகர்களின் உதவி தேவை. உங்களது ஒத்துழைப்பே எங்களுக்கு உற்சாகம் தரும்.

அன்புடன்
காவ்யா சண்முகசுந்தரம்.