பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61 கால்டுவெல்


நாடுகளின் அழகும் அலங்காரமும் மலபாரிலிருந்து பின்பற்றப்பட்டன. அதற்கு ஏற்றதுபோன்று மபார் இந்தியாவுக்கு நுழைவாயில்போன்று அமைந்திருந்தது (மார்க்கபோலோ, 2-269).

பின் காண்பவை முத்துக்குளித்தல் பற்றி மார்க்கபோலோ விவரிக்கும் வருணனை:

முத்துக்குளித்தல்: ‘மார்க்கபோலோவாலும் அராபியர்களாலும் அக்காலத்திற் கூறப்பட்ட மபார் என்ற சொல்லில், நாம் பார்த்ததுபோல, சோழமண்டலக்கரையில் பெரும் பகுதியும் சேர்ந்திருந்தது. ஆனால், மபாரின் முத்துக்குளித்தலைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது மபாரின் தென்பகுதியையே சிறப்பாக அச்சொல் குறிக்கிறது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் நினைக்கிறேன். இத்தென் மபார் பகுதி இராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரி வரை மன்னர் வளைகுடாவின் கிழக்குக் கரையாய் அமைந்திருந்தது. இராமநாதபுரத்தின் கரையில் நடந்துவந்த முத்துக் குளித்தல் அவ்வளவு புகழ் பெற்றிருக்கவில்லை. போலோ அத்துறைமுகத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறாரேயன்றி அதற்குப் பெயரிடவில்லை. எனவே, அத்துறைமுகம் கீழ் கரைக்கு அருகிலோ அன்றியும் கீழ்க்கரையைச் சார்ந்தோ இருந்திருக்க வேண்டும். அல்லது பெரிய பட்டணம் என்ற இடமாய் அது இருந்திருக்கலாம். அந்த இடம் இப்பொழுது உள்நாட்டில் சில மைல் தூரத்திலிருக்கிறது. ஆனால், அதன் புகழெல்லாம் முற்றும் மங்கி மறைந்துவிட்டது’ என்று (‘இபுபாடொ பாடன் என வழங்கும் அந்தப் பட்டணம்’ என்பது இந்த இடமா?) மார்க்கபோலோ எழுதுகிறார்.

கப்பலில் செய்லான் (இலங்கை) தீவை விட்டுப் புறப்பட்டு மேற்குத் திசையில் அறுபது மைல் சென்றால், மகா இந்தியா என்று வழங்கப்படும் மபார் என்னும் பெரிய மாகாணத்துக்கு நீங்கள் வருவீர்கள். அது இந்தியத் தீவுகளிலெல்லாம் மிகச் சிறந்தது. அது இந்தியப் பெருநிலத்திலேயே அமைந்திருக்கிறது. அந்த மாகாணத்தில் ஒரு வயிற்று உடன்பிறப்பாளர்களாகிய ஐந்து அரசர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நான் ஒவ்வொருவரைப் பற்றியும் முறையாக உங்களுக்குச் சொல்கிறேன். அம்மாகாணம் உலகத்திலேயே முதன்மையான சிறப்புடைய பகுதியாகும். மாகாணத்தின் முனைப்பகுதியை ஐந்து அரச உடன் பிறப்பாளர்களுள் ஒருவராகிய முடிமன்னர் சுந்தர பாண்டித் தேவர் ஆண்டு வந்தார். அவர் நாட்டில் அவர்கள் மிகச்சிறந்த உயர்ந்த மதிப்புள்ள முத்துகளைக் கண்டார்கள். அவற்றை அவர்கள் எவ்வாறு பெற்றார்கள் என்பதை நான் கூறுகிறேன். அந்த இடத்தில் செய்லானுக்கும் (இலங்கைக்கும்) முக்கிய