பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 64


தரங்களிலும் எல்லா வடிவங்களிலும் நிறங்களிலும் செய்யப்பட்ட சீனக் களிமண் பாண்டங்களையும் நான் தொகுத்து வைத்திருக்கிறேன். நான் விரும்பியிருந்தால், ஒரு பகற்பொழுதிலேயே ஒரு வண்டிச்சுமையளவு அப்பொருள்களை எளிதாக நான் சேகரித்திருக்க இயலும் (பாதிரியாரின் ஆராய்ச்சிக் காதலே காதல்! - ந.ச.). ஆனால், நொறுங்கிய துண்டுகளை ஒன்றுசேர்த்துப் பாத்திரத்தின் உருவத்தை ஊகிக்க முடியாத அளவு அம்மட்பாண்டத் துண்டுகள் நிலத்தை உழுததனாலும், எருதுகளின் கால்களில் மிதிபட்டும் பல சிறுதுண்டுகளாய் நொறுங்கியிருந்தன. ஒரு நாள், நான் துணிகரமாக அப்பிரதேசத்தின் ஒரு முழு பகுதியைக் குழிவெட்டும் ஒரு கூட்டத்தினரைக் கொண்டு தோண்டச் செய்தேன். இப்போதைய பூமி மட்டத்திற்கு மூன்று அடி ஆழத்தின் கீழே ஒரு வீட்டின் சுண்ணாம்பும் காரையிடப்பட்ட தரையும் அவர்கள் கண்டார்கள். ஆனால் அதில் முக்கியமான பொருள் ஒன்றும் கிட்டவில்லை. சாதாரணமாக அப்பகுதியை ஒரே நாளில் ஒழுங்காக நுட்பத்துடன் ஆராய இயலாது. ஒரு மாத காலம்வரை அகழ்ந்து எடுக்கக்கூடிய அவ்வளவு பெரிய பரப்புடைய இடம் காயல். காயலிலும் கொற்கையிலும் அதன் அருகிலுள்ள இடங்களிலுமிருக்கும் மக்கள் காயலுக்கும் சீனாவிற்கும் நடந்த வியாபாரத்தைப் பற்றியும் அதன் சிறப்பையும் மறந்து விட்டார்கள். அப்பிரதேசம் முழுவதிலும் கிடைக்கின்ற உடைந்த சீன மட்பாண்டங்களின் துண்டுகள் அச்செய்தியை அவர்கள் நினைவு கூறும்படி செய்யக் கூடிய அளவு இருந்தும் மக்கள் அதை மறந்து விட்டார்கள். சமீபகாலம் வரை அரேபியாவும் பெர்ஷியன் குடாவும் வியாபாரத் தொடர்பு கொண்டிருந்தைமையால் அங்குள்ள மக்கள் அவ்வியாபாரத்தைப் பற்றிய தெளிவான செய்தியை மட்டும் அறிந்திருப்பதை உணர்ந்தேன். காயல் துறைமுகமாகப் பயன்படாது புறக்கணிக்கப்பட்டு விட்ட காலத்தில் ஐரோப்பிய வியாபாரிகள் ஐயமில்லாமல் போர்ச்சுகீசியர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள் என்பதைப் பற்றிய மரபும் இருந்தது. மார்க்கபோலோவின் காயலைக் காயல்பட்டினத்தோடு ஒப்பிடாமலிருக்கக் கவனம் செலுத்தவேண்டுமென்று நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். இக்காயல்பட்டினத்தின் கரையருகே உள்ள மற்றொரு நகரில் இப்போது பெரிய பரப்புடைய புதிய இடத்தில் சுமார் ஏழாயிரத்துக்கு அதிகமான மகம்மதியர்கள் இருக்கின்றார்கள். கடல் அருகிலேயே மற்றொரு சிறிய துறைமுகம் இருக்கிறது. அது காயல் பட்டினத்திற்குச் சிறிது வடக்கே அமைந்துள்ளது. தேசப்படங்களில் அதன் பெயர் ‘பின்னகாயல்’ என்று வழங்கப்படுகிறது. ஆனால், உண்மையில் அதன் பெயர் ‘புன்னைக் காயல்’ என்பதே. ஆனால், அந்த