பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67 கால்டுவெல்


அதாவது பருத்தி விளையும் கறுப்புமண் நிறைந்த நாடு - என்பதைக் குறித்திருக்கலாம். பிந்திய பெயர் நம்முடைய பெயராகிய கர்நாடிக்கு என்பதோடு எல்லா விதங்களிலும் ஒப்புமையுடையதாயிருக்கிறது. ஆனால், அது மலைத் தொடர்ச்சிக்கு மேலே இருக்கும் மைசூரும் அதைச் சேர்ந்த உயர்ந்த பீடபூமியையும் குறிக்கிறது. இக்கன்னட அரச பரம்பரையின் தலைநகரம் துவார சமுத்திரமாயிருந்தது. இது மைசூர் நாட்டின் மத்தியில் உள்ளது; சீரங்கப்பட்டணத்திற்கு வடமேற்கே சுமார் 105 மைலில் உள்ளது. துவார சமுத்திரம் என்ற பெயர் மைசூர் நாட்டின் எல்லாக் கல்வெட்டுகளிலும் ‘தொரசமுத்திரம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. ‘துவார’ என்பதன் மருஉவே ‘தொர’ என்பது. அவ்விடத்திற்கு இக்காலப் புதுப்பெயர் ஹளபீடு அல்லது ஹளியபிடு என்பது. இதன் பொருள் பழைய இருப்பிடம் என்பது. ஹளபிடுவிலுள்ள பழைய கோவிலிருக்கும் சிலை ஒன்று புகழ் பெற்ற பெர்குசனிடமிருந்து கிடைத்தது. (இந்த இடத்தையும் இங்குள்ள ஒப்புயர்வற்ற கலைச் சிற்பங்களையும் சென்ற கோடை விடுமுறையில் நேரில் சென்று பார்த்தேன். தமிழ் - ப கன்னடத்தில் ஹ ஆகும். பால், ஹாலு என்று மாறுவது போல அப்படியே தமிழ் வ கன்னடத்திலும் வேறு சில வடமொழிகளிலும் ப ஆகும். எனவே பழவீடு ஹளபீடு ஆயிற்று- ந.ச.). துவார சமுத்திர அரசபரம்பரையினர் ஹோய்சலர்கள் அல்லது சாதாரணமாகப் பலாலர்கள் என்று வழங்கப்பட்டனர். இந்தப் பெயர் பராக்கிரமமுடையவன் என்ற பொருளில் ‘பலா’ என்பதிலிருந்து தோன்றியது. சிலகாலம் வரை தெற்கேயுள்ள சோழ பாண்டியர், மற்றுமுள்ள பழங்கால அரசபரம்பரையின் நாடுகளையும் வெற்றிகண்டு முதன்மையான ஆதிக்கம் செலுத்தி வந்தனராகையால் இப்பெயர் ஏற்பட்டது.

இந்தப் பரம்பரையின் முதல் அரசன் பிட்டிதேவன். இவன் பெரும் பரப்புள்ள மாவட்டங்களை வென்று தன் ஆதிக்கத்திற்குட்படுத்தினான். இவன் ஜைனமதத்தினன்; இராமானுஜாச்சாரியாரால் ஜைன மதத்தினின்றும் வைணவ மதத்திற்கு மாற்றப்பட்டவன். மதமாற்றத்திற்குப்பின் இவன் பெயர் ‘விஷ்ணுவர்த்தனன்’ என மாறியது. இவன் மதமாற்றம் ஏறக்குறைய 1117 இல் ஏற்பட்டது. இராமானுஜர் கடும் சைவனான கரிகாற்சோழன் செய்த சித்திரவதைக்குப் பயந்து நாடு கடந்து ஓடினார் (இதற்கு ஆதாரம்? - ந.ச.). இதற்கு முன்பே விஷ்ணுவர்த்தனன் தென்னிந்தியாவில் பலமிக்க அரசனாகிவிட்டான். அவனும் சோழ பாண்டிய கேரளர்களை அடக்கியதாகக் குறிப்பாகக் கூறியுள்ளான். தெற்கே இக்காலத்தில் கன்னடியர்கள் சிறப்படைந்ததைப் பற்றிய ஆதாரங்கள் - முக்கியமாக முகம்மதிய